அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய விவசாய சங்க கூட்டமைப்பின் மாநிலச் செயலாளர் வாரணவாசி ராஜேந்திரன், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பேசினார். அவர் பேசுகையில்,
கீழப்பழுவூர் வேளாண்மை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் பிடிபட்ட அதிகாரியின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? அவர் அரியலூர் மாவட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டாரா? அல்லது தொடர்ந்து இங்கேயே காத்திருப்போர் பட்டியலில் உள்ளாரா என்கிற தகவலை அறிய விரும்புகிறேன். அவரோடு பணியாற்றிய அதிகாரிகள் வேறு இடங்களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டும், தற்காலிக பணியாளராக பணிபுரிந்தவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டும் விட்டார்கள். ஆனால் துறைக்கு பொறுப்பு வகித்த அதிகாரி மட்டும் இன்னும் இந்த மாவட்டத்திலேயே அதிகாரம் செய்து கொண்டிருப்பதாக அறிகிறோம். அவர் மீண்டும் இந்த மாவட்டத்தில் பணி செய்வதற்கு அனுமதிக்க கூடாது என்று கூறினார்.
திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமானூர், கீழப்பழுவூர் பகுதிகளில் கடந்த ஆண்டு சாகுபடி செய்த மக்காச்சோளம், நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு அரசின் மூலம் கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை கிடைத்தது. ஆனால் இன்சூரன்ஸ் செய்திருந்த விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் கம்பெனியின் மூலம் இழப்பீடு இன்னும் கிடைக்கவில்லை. அதற்கான காரணம் என்னவென்று புரியவில்லை. ஒரு பயிர் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்கின்ற கருத்து அரசுக்கு சென்றதன் மூலம் அரசு இழப்பீட்டுத் தொகை வழங்குகிறது. ஆனால் அதே பகுதிக்கு இன்சூரன்ஸ் செய்த விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் கம்பெனி இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என்பது வேடிக்கையாகவும், கேள்விக்குறியாகவும் உள்ளது. அதற்கு சொல்லுகிற காரணம் ஊழல் செய்த அதிகாரி பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் 3000 ரூபாய் வீதம் லஞ்சப் பணம் பெற்றுக் கொண்டு பணம் கொடுத்தவர்களுக்கு இழப்பீட்டிற்கான பரிந்துரையை செய்திருப்பதாகவும் தகவல் வருகிறது. அதனையும் ஆய்வு செய்ய வேண்டும்.
திருமானூர் வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் விதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் அலைக்கழிக்கப்படுகிறார்கள். இருக்கிற விதை நெல்லையும் வழங்குவதற்கு ரசீது போடுவது ஒரு இடத்திலேயும், விதை நெல்லை வாங்குவதற்கு ஏலாக்குறிச்சிக்கு செல்ல வேண்டும் என்றும் விவசாயிகளை அதிகாரிகள் வற்புறுத்துகிறார்கள். இந்த நிலைகள் மாற வேண்டும். இப்படி பணம் பெறுவது ஒருபக்கமாகவும் பொருள் கொடுப்பது ஒரு பக்கமாகவும் இருப்பதால்தான் கடந்த காலத்தில் அங்கே முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் வந்தது. அதே நிலைமை மீண்டும் தொடர்கிறது என்று சொன்னால் வேளாண்மை துறையின் கட்டுப்பாட்டில் திருமானூர் அலுவலகம் உள்ளதா? இல்லையா?என்கிற சந்தேகம் ஏற்படுகிறது. அதனை நிவர்த்தி செய்ய வேண்டும்.
பயிரி இன்சூரன்ஸ் செய்வதற்கு விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர்களை தொடர்பு கொள்கிற பொழுது அவர் அந்த நிலத்தில் நெல் சாகுபடி செய்ய உள்ளார் என்று சான்று வழங்கலாம். அதை வைத்து அவர்கள் பயிரி இன்சூரன்ஸ்க்கான கட்டணத்தை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். நெல் சாகுபடி செய்ய உள்ளார் என்ற சான்று வழங்கினால் அதனை கொடுத்து அவர்கள் இன்சூரன்ஸ் தொகையை செலுத்தி அவர்களும் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் அவற்றை வழங்குவதற்கு அதிகாரிகள் பல இடங்களில் மறுக்கிறார்கள். சில இடங்களில் வழங்குகிறார்கள். அந்த நிலைமைகள் மாற வேண்டும். விவசாயி தண்ணீர் வந்தால் தான் சாகுபடி செய்ய முடியும். ஆனால் நீங்கள் வைத்திருக்கிற காலக்கெடு இன்சூரன்ஸ் செய்வதற்கான தேதி குறுகிய காலமாக உள்ளது. மழை பெய்து அவர்கள் நடவு நட்டு அல்லது மக்காச்சோளம் பயிரிட்டு அதற்கு பின்பாக இன்சூரன்ஸ்க்கான அடங்கல் வாங்கி அவர்கள் பதிவு செய்வது என்பது நடைமுறைக்கு சாத்தியமானது அல்ல. ஆகவே விவசாயிகள் கேட்கிற சாகுபடி செய்ய உள்ளார் என்கிற சான்றுகளை வழங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என்று கூறினார்