தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள பொதுமக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். இதன்படி ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் பொதுமக்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில், ஜெயங்கொண்டம் ஒன்றியம், கழுவந்தோண்டி ஊராட்சி, கழுவந்தோண்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.4.65 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கதிரடிக்கும் களத்தினை பார்வையிட்டு, கதிரடிக்கும் களத்தின் தரம் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்ததுடன் கதிரடிக்குளம் களத்தினை முறையாக பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து முத்துசேர்வாமடம் ஊராட்சி, சம்போடை கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிதிட்டம், விரிவான பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பொதுநிதியின் கீழ் ரூ.13.57 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும்
அங்கன்வாடி மையக் கட்டடக் கட்டுமானப் பணியையும், சுண்டிப்பள்ளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மூன்று வகுப்பறைகள் கொண்ட பள்ளிக் கட்டடக் கட்டுமானப் பணியையும் பார்வையிட்டு கட்டுமானப் பொருட்களின் தரம் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்து பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா அறிவுறுத்தினார். இந்த ஆய்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்(பொ) எஸ்.முருகண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.