அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிக்களுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வெளியிட்டார்.
இந்தியதேர்தல் ஆணையம் 01.01.2025 நாளை தகுதி ஏற்பு நாளாக கொண்டு 2025-ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் மேற்கொள்ள ஆணையிட்டுள்ளது. அதன் முதன்மை பணியாக வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வரைவு வாக்குச்சாவடி பட்டியல் இன்று (29.08.2024) அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்பாக வெளியிடப்பட்டது.
அதன்படி 149-அரியலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 2,60,185 வாக்காளர்களுக்கு 306 வாக்குச்சாவடிகளும் (Polling
Stations), 199 வாக்குச்சாவடி மையங்களும் (Polling Station Locations), 150-ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 2,58,532 வாக்காளர்களுக்கு 290 வாக்குச்சாவடிகளும் (Polling Stations), 160 வாக்குச்சாவடி மையங்களும் (Polling Station Locations) என மொத்தம் 5,18,717 வாக்காளர்களுக்கு 596 வாக்குச்சாவடிகளும் (Polling Stations), 359 வாக்குச்சாவடி மையங்களும் (Polling Station Locations) வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், மாவட்ட வழங்கல் அலுவலர் ராமலிங்கம். வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன் (அரியலூர்), ஷீஜா (உடையார்பாளையம்) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.