குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் திருவுருவச்சிலை அமைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்த வெள்ளி விழா தினத்தினை முன்னிட்டு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி இன்று (31.12.2024) மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அய்யன் திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளிவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் அய்யன் திருவள்ளுவர் சிலை செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச்சிலை கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு 25-ம் ஆண்டு வெள்ளி விழாவினை முன்னிட்டு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவரின் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச்சிலை அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அய்யன் திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழாவினை முன்னிட்டு பொது நூலகத்துறையின் சார்பில் அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற வினாடி வினாப் போட்டியில் கலந்துகொண்டு முதலிடம் பிடித்த அரியலூர் மின்நகரைச் சேர்ந்த வாசகர் மு.கார்த்திகேயன், இரண்டாமிடம் பிடித்த பெரியதிருக்கோணம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 12 ம் வகுப்பு மாணவன் ரா.விஷ்வா, மூன்றாமிடம் பிடித்த கட்டையன் குடிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 5 ம் வகுப்பு மாணவி சு.ஜனனி ஆகியோருக்கும், இதேபோன்று பேச்சுப்போட்டியில் முதலிடம் பிடித்த இடையத்தான்குடி அரசு நடுநிலைப்பள்ளி 8 ம் வகுப்பு மாணவி க.திவ்யதர்ஷினி, இரண்டாமிடம் பிடித்த அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி 8 ம் வகுப்பு மாணவி ரா.அபர்ணா, மூன்றாமிடம் பிடித்த செந்துறை அறிஞர் அண்ணா மழலையர் தொடக்கப்பள்ளி 1 ஆம் வகுப்பு மாணவன் இ.தர்ஷித் ஆகியோருக்கும், மேலும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் முதலிடம் பிடித்த த.பொட்டக்கொல்லை, அரசு மேல்நிலைப்பள்ளி 6 ஆம் வகுப்பு மாணவி ர.இனியா, இரண்டாமிடம் பிடித்த நெய்வனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 5 ம் வகுப்பு மாணவி பி.ரே.தாரகை, மூன்றாமிடம் பிடித்த சிலால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 3 ம் வகுப்பு மாணவி ம.நிவந்திகா ஆகியோருக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி வழங்கினார்.
பின்னர், நெய்வனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5 ம் வகுப்பு பயின்று வரும் மாணவி பி.ரே.தாரகை தான் சேமித்து வைத்திருந்த ரூ.1100/- தொகையினை முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமியிடம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சுருளிபிரபு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவானந்தன், மாவட்ட நூலக அலுவலர் வேல்முருகன், அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, மாவட்ட நூலக ஆணைக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.