அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில். குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, அரியலூர் மாவட்ட தொழில் மையம் சார்பில் கடன் வசதியாக்கல் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தொடங்கி வைத்து, 57 நபர்களுக்கு ரூ.2.37 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாவட்டங்கள் சிறந்த பயன்களை அடைய, கடன் வசதியாக்கல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தொழில் வளர்ச்சியில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை 70 சதவீதம் பங்களிப்பை வழங்குகிறது. 2024-2025 நிதியாண்டில் அரியலூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு 7,601 வங்கி கணக்கிற்கு ரூ.370.07 கோடி ஆண்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 2,427 வங்கி கணக்கிற்கு ரூ.189.28 கோடி இலக்கீடு அடையப்பட்டுள்ளது.
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை விவசாயத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய வேலைவாய்ப்பு உருவாக்கும் துறையாகும். இது இந்தியாவில் சுமார் 120 மில்லியன் நபர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றும் லட்சிய இலக்கை அறிவித்தார். இதன்படி அரியலூர் மாவட்டத்தில் 27 அலகுகளில் இருந்து ரூ.167.03 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
மாவட்ட தொழில் மையத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மானியங்களை வழங்குவதைத் தவிர, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் குறிப்பிட்ட தேவைகளை எளிதாக்குவதற்கு மேலும் பல சேவைகளை செய்து வருகிறது. அந்த வகையில், மாநிலத்தின் வளர்ச்சிக்காவும் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் நீட்ஸ், யு.ஒய்.இ.ஜி.பி மற்றும் ஏஏபிசிஎஸ் போன்ற தொழிற்கடன் திட்டங்கள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வட்டம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான ஊக்குவிப்பு கூட்டங்கள் நடத்தப்படுகிறது. தொழில் நிறுவனங்கள் இயக்க தேவையான அனுமதிக்கு ஒற்றைச் சாலர (Single Window) முறை வாயிலாக தீர்வு காணப்படுகிறது. நிறுவனங்களுக்கான ஆற்றல் தணிக்கை மற்றும் ஆற்றல் சேமிப்பு குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு செய்து தரப்படுகிறது.
அந்தவகையில் அரியலூர் மாவட்டத்தில் கடன் வசதியாக்கல் முகாம்கள் மூலம் 01.04.2024 முதல் 30.09.2024 முடிய உள்ள காலத்திற்கு ரூ.189.28 கோடி கடனுதவி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 01.10.2024 முதல் 24.10.2024 வரையிலான காலத்திற்கு அனைத்து துறையின் வாயிலாகவும் அரியலூர் மாவட்டத்தில் ரூ.12.24 கோடிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இன்றையதினம் நடைபெற்ற கடன் வசதியாக்கல் முகாமின் வாயிலாக 57 நபர்களுக்கு ரூ.2.37 கோடி மதிப்பில் கடனுதவிக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வழங்கினார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதர இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் லட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சங்கர சுப்பரமணியன், வங்கி மேலாளர்கள் மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.