வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் அரசு மானியத்துடன் கூடிய மின்சார மோட்டார் பம்ப்செட்டுகள் பெறுவதற்கு மாநில நிதி ஒதுக்கீட்டின் கீழ் இத்திட்டம் 2024-2025 ஆம் ஆண்டில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரியலூர் மாவட்டத்திற்கு 90 எண்களுக்கு 13.50 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீர் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், பயிர் உற்பத்தியினை அதிகரிக்கவும் நிலத்தடி நீர் பாசனத்தில் மின் மோட்டார் பம்பு செட்டுகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. திறன் குறைந்த மின் மோட்டார் பம்பு செட்டுகள் தொடர்ந்து பயன்படுத்துவதால் மின் நுகர்வு அதிகமாகி பயிருக்கு நீர் பாய்ச்சுவதற்கான நேரமும் அதிகரிக்கிறது. எனவே தமிழக அரசு மூன்று ஏக்கர் வரை நிலம் சொந்தமாக வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின்மோட்டார் பம்ப்செட் மாற்றுவதற்கும் அல்லது புதியமின் மோட்டார் பம்ப்செட் வாங்குவதற்கும் (அதிகபட்சம் 10 HP வரை) மானியமாக ரூ.15,000/- அல்லது மொத்த விலையில் 50% இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.
மானியத்துடன் கூடிய மின்சாரமோட்டார் பம்ப்செட் வழங்கும் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் (நெல் பயிரிடும் விவசாயிகள் தவிர) நுண்ணீர் பாசன மேலாண்மை திட்டத்தில் பதிவு செய்து நுண்ணீர் பாசன முறையில் பாசனம் செய்ய வேண்டும்.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விவசாயிகள் சிட்டா அடங்கல், சிறு மற்றும் குறு விவசாயிக்கான வட்டாட்சியர் சான்று, மின் இணைப்புசான்றின் நகல், வங்கிப் புத்தகத்தின் முதல் பக்க ஒளிமநகல் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை தங்கள் வட்டாரத்திற்குட்பட்ட உதவிசெயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்களில் விண்ணப்பிக்கக்கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும் இத்திட்டம் தொடர்பான முழு விவரங்களைப் பெற்றிட ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம், செந்துறை பகுதிகளை சார்ந்த விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் வேளாண்மைப் பொறியியல் துறை, வெள்ளைப்பிள்ளையார் கோவில் தெரு, பரணம் ரோடு, உடையார்பாளையம் மற்றும் அரியலூர், திருமானுர் பகுதிகளை சார்ந்த விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் வேளாண்மைப் பொறியியல் துறை அறை.எண்.26, பல்துறை வளாகம், ஜெயங்கொண்டம் மெயின் ரோடு, அரியலூர் அலுவலகங்களை அணுகுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.