அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடிநாள் வசூல் பணியினை மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி கொடிநாள் வசூல் உண்டியலில் நிதி அளித்து, இன்று துவக்கி வைத்தார்.
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி தெரிவித்ததாவது… நமது தாயகத்தைக் காக்கும் பணியில் முப்படைகளிலும் பணிகளில் ஈடுபட்டுள்ள படைவீரர்கள் மற்றும் படைப்பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள முன்னாள் படைவீரர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ம் நாளன்று படைவீரர் கொடிநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அரசால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு கொடிநாள் நிதி வசூல் துவக்கப்படுகிறது. எனவே நமது படைவீரர்களின் தன்னலமற்ற தியாகத்தை போற்றிடும் வகையில் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கொடிநாள் வசூலில் தாராளமாக நிதி வழங்கவேண்டும் என்றார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற தேநீர் விருந்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு கல்வி உதவித்தொகை, கண்கண்ணாடி, திருமண நிதியுதவி உள்ளிட்ட திட்டத்தின் கீழ் 20 நபருக்கு ரூ.3,21,000/-நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மேலும், ஒருமகன் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட மகன்களை இராணுவப்பணிக்கு அனுப்பிய 19-பெற்றோருக்கு வெள்ளிப்பதக்கங்கள் வழங்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டின் கொடிநாள் இலக்கீனை எய்திய 20 மாவட்ட அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
2022-ம் ஆண்டிற்கான கொடிநாள் நிதி வசூல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது ரூ.42,80,000/- ஆகும். ஆனால் நமது மாவட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களின் ஒத்துழைப்போடு நிர்ணயித்த இலக்கைவிட கூடுதலாக ரூ.46,87,000/- நிதி வசூலித்து 110% சதவீதத்துடன் சாதனை எட்டியுள்ளது. நடப்பாண்டின் 2023-க்கான அரசின் இலக்கு இவ்வருடமும் கடந்த ஆண்டு போல கொடிநாள் நிதி வசூலில் அனைத்துறைகளின் ஒத்துழைப்புடன் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை காட்டிலும் கூடுதலாக வசூலித்து, சாதனை படைக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக கண்காணிப்பாளர் மற்றும் உதவி இயக்குநர் (கூ.பொ) ம.கலையரசிகாந்திமதி மற்றும் பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்