அரியலூர் மாவட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக செந்துறை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில்
மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி நேரில் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், “மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும். “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் அவர்களின் கீழ் உள்ள மாவட்ட நிலை அலுவலர்களுடன் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்கள், சேவைகள் தங்குதடையின்றி மக்களை சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு மாதமும் மூன்றாம் புதன்கிழமை ஒரு தாலுகா தேர்வு செய்யப்பட்டு “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் செயல்படுத்திட தமிழக அரசால் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நேற்றையதினம் (21.08.2024) அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் அலுவலகங்கள், அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி மற்றும் மாவட்ட நிலை அலுவலர்கள் ஆகியோர் நேரில் கள ஆய்வு பணிகள் மேற்கொண்டனர். தொடர்ந்து மாவட்ட நிலை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டமும் நடைபெற்றது. மேலும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி பெற்றுக்கொண்டார்.
பின்னர் செந்துறை அரசு மருத்துவமனையினை பார்வையிட்டு காய்ச்சல் பிரிவு, மகப்பேறு மருத்துவப் பிரிவு, கட்டுப்பாட்டு அறை, மருந்து கிடங்கு, மருந்து பொருட்களின் இருப்புப் பதிவேடு உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து செந்துறை அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி மற்றும் செந்துறை பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர்கள் விடுதிகள் உள்ளிட்டவற்றில் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களின் எண்ணிக்கை, விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்கள் விவரம், மாணவர்களுக்கு அளிக்கப்படும் உணவுகள், கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்டவற்றை கேட்டறிந்ததுடன், மாணவர்களுக்கு உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தினையும் பார்வையிட்டு உணவுகள் சமைக்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.3.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 8 வகுப்பறை கட்டடம், நான்கு ஆய்வக கட்டடம், கழிவறை கட்டடம், சுற்றுச்சுவர் ஆகிய கட்டுமான பணிகளை பார்வையிட்டு பணி தொடங்கிய காலம், முடிவுற்ற பணிகளின் விவரம், கட்டுமான பொருட்களின் தரம், உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து ஆய்வு செய்ததுடன், பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி அறிவுறுத்தினார்.
அதன் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றையதினம் (22.08.2024) செந்துறை வட்டம், செந்துறை பேருந்து நிலைய பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகளை பார்வையிட்டு தொடர்ந்து தூய்மை பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளவும், சாலைப்பகுதிகள் மற்றும் கழிவு நீர் கால்வாய்கள்
உள்ளிட்ட இடங்களில் குப்பைகள் தேங்காத வண்ணம் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
செந்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டியினை பார்வையிட்டு, நீர்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்யப்படும் நாட்களின் விவரம், குளோரின் பயன்படுத்தப்படும் முறைகள், குடிநீர் விநியோகம் செய்யப்படும் நேரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும், நீர்த்தேக்க தொட்டியினை குறிபிடப்பட்டுள்ள நாட்களில் முறையாக தொடர்ந்து சுத்தம் செய்திட வேண்டும் எனவும், அனைத்து பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் குடிநீர் தொடர்ச்சியாக கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், செந்துறை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு தொகுப்பு பால் குளிர்வு மையத்தினை பார்வையிட்டு பால் கொள்முதல் செய்யப்படும் விவரம், பால் கொள்முதல் செய்யப்பட்ட விவரங்கள் அடங்கிய இரசீதுகள், பால் பதப்படுத்துதல் திறன் குறித்தும் மற்றும் பால் விற்பனை விவரம், கூட்டமைப்பின் செயல்பாடுகள், உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததுடன், பாலினை பிறபகுதிகளுக்கு அனுப்பி வைக்கும்பொழுது சுகாதாரமான முறையினை தொடர்ந்து கடைபிடித்திட வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, செந்துறை ஊராட்சி ஒன்றியம், செந்துறை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் சமையல் கூடத்தினை பார்வையிட்டு பொருட்களின் இருப்பு, உணவின் தரம், இருப்பு பதிவேடுகள், பொருட்களின் காலாவதி நாள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்ததுடன் உணவினை சாப்பிட்டு ஆய்வு செய்தார். மேலும் மாணவர்களுக்கு உணவினை தொடர்ந்து சுகாதாரமான முறையில் தயாரித்து போதிய அளவில் வழங்கிட வேண்டும் எனவும், பொருட்களை தினசரி பயன்படுத்தும் முன் காலவாதியாகும் நாளை சரிபார்த்த பின்னரே பயன்படுத்தவேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி அறிவுறுத்தினர்.
பின்னர், செந்துறை ஊராட்சி மன்ற அலுவலகத்தினைப் பார்வையிட்டு, ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகள், பணியாளர்களின் எண்ணிக்கை, வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ள விவரம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளின் எண்ணிக்கை உள்ளிட்;ட பல்வேறு விவரங்களை கேட்டறிந்து, நீர்தேக்க தொட்டிகளை தொடர்ந்து முறையாக குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் சுத்தம் செய்ய வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் வருவாய் கோட்டாட்சியர் உடையார்பாளையம் ஷீஜா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பழனிசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) பிரபஞ்சன், வட்டாட்சியர் செந்துறை வேலுமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், ஜாகிர்உசைன் மற்றும் மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.