அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், சுள்ளங்குடி கிராமத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தனபெ.ரமண சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.
கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி தெரிவித்ததாவது,
அரியலூர் மாவட்டத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெறும் கிராம சபைக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்தும், சுத்தமான குடிநீர் விநியோத்திற்கான உறுதி செய்வது குறித்தும், கிராம வளர்ச்சித் திட்டம் (VPDP) குறித்தும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்தும், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம் குறித்தும், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு குறித்தும், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம் குறித்தும், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) குறித்தும், ஜல் ஜீவன் இயக்கம் குறித்தும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் குறித்தும், நான் முதல்வன் திட்டம் குறித்தும், குழந்தை பாதுகாப்பு குறித்தும், பள்ளி மேலாண்மைக் குழு குறித்தும் மற்றும் இதர பொருட்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் தனிநபர் சுகாதாரத்தினை மேம்படுத்திடும் வகையில் ஊட்டச்சத்து இயக்கத்தில் கிராமப்புற மக்களை பங்கு பெறச் செய்வதை பற்றி அங்கன்வாடி பணியாளர்கள் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும், கிராம ஊராட்சியில் தடைசெய்யப்பட்டுள்ள ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துவதை முற்றிலுமாக தவிர்ப்பது குறித்தும், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களான துணி மற்றும் பாத்திரங்கள், பாக்கு மட்டை தட்டுகள், இலைகள், மந்தாரை இலை, துணியால் ஆன கொடிகள், மூங்களில் பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்துவது குறித்தும், மீண்டும் மஞ்சப்பபை, திடக்கழிவு மேலாண்மை போன்ற பொருட்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி தெரிவிக்கும் பொழுது, பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற புகார்களின் அடிப்படையில் வீடுகளில் குடிநீர் இணைப்புக்காக வழங்கப்பட்டுள்ள இணைப்புகளில் மோட்டார் பயன்படுத்துவது குறித்து நடவடிக்கை மேற்கொண்டு வரும் மே 15 ஆம் தேதி உரிய பதில் தர ஊராட்சி செயலாளருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் சுள்ளங்குடி கிராமத்தினை தூய்மையாக பராமரிப்பது தொடர்பாக உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
இக்கூட்டத்தில், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) தமிழ்ச்செல்வன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பாலமுரளி, ஊராட்சி மன்றத்தலைவர் சேகர், திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகிர் உசைன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.