நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளின் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தால் விதிமுறைகள் திரும்ப பெறப்பட்டது. இதனையடுத்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 190 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆனி மேரி ஸ்வர்ணாவால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
முன்னதாக உலக சிக்கன நாள் விழாவினை முன்னிட்டு சிறு சேமிப்பு மாண்பினை பறை சாற்றும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே நடைபெற்ற கவிதைப்போட்டியில் பங்குபெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ள அரியலூர் மாவட்டம், செந்துறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 11 ம் வகுப்பு மாணவி கொ.ஜெயஸ்ரீக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்குநர் லெட்சுமணன், மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.