அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ரூ.120 கோடி மதிப்பிலான 53 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.88 கோடியில் 507 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், ரூ.174 கோடியில் 21,862 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், முதல்வர் ஸ்டாலின் விழாப்பேருரை ஆற்றினார்.
இவ்விழாவில் முதல்வர் பேசியதாவது:
தமிழகத்தில் மக்களுக்கு தேவையான திட்டம், அதற்கு தேவையான நிதி, அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள் என்று எண்ணாமல் நேரடியாக கள ஆய்வு செய்து மக்களின் ஆதரவு பெற்ற அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஆட்சியில், நாட்டில் என்ன நடக்கிறது என்பதை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று சொல்லும் அளவிற்கு இருந்தது. இந்த ஆட்சியில் மக்களின் பிரச்சினைகளை தெரிந்துகொண்டு, அவற்றை தீர்ப்பதால் என்னை பொதுமக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர். நான் காப்பாற்றுவேன் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உள்ளது.
நான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பெருந்திரளாக கூடும் மக்களின் கூட்டத்தை பார்த்து, அவர்களின் நம்பிக்கை, அன்பை, கண்டு எடப்பாடிக்கு பெரிய கலக்கம் உருவாகியுள்ளது. அதனால் தினந்தோறும் எடப்பாடி பழனிச்சாமி, தன்னை மறந்து, மீடியா முன்பு பொய் மூட்டைகளை அடுக்கி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சி கொடுத்ததாகவும் கூறி வருகிறார். பொய்க்கு மேக்கப் போட்டால் பளிச்சென்று உடனே தெரிந்து விடும் அளவிற்கு அவர் கூறி வருகிறார்.
தனது ஆட்சியில் மூன்று லட்சம் கோடி தொழில் முதலீடுகளை ஈர்த்ததாக கூறும் எடப்பாடி பழனிச்சாமி, முதலீடு மாநாடு நடத்தியதன் மூலம், தமிழ்நாட்டில் எத்தனை தொழிற்சாலைகள் வந்துள்ளது, எத்தனை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது என்று அவரால் பட்டியலிட்டு கூற முடியுமா? அவரின் ஆட்சி காலத்தில், தொழில் முதலீடு செய்வதற்காக வந்தவர்கள், கலெக்ஷன், கரப்ஷன் என்ற காரணத்தினால் ஓடி விட்டனர். தற்பொழுது திமுக ஆட்சி 10 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்து 31 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளை உருவாக்கி, நல்ல ஆட்சியாக செயல்பட்டு வருகிறது.
எப்படா முடியும் எடப்பாடி ஆட்சி என்று ஒவ்வொரு தன்மான தமிழ் மக்களும் நினைத்துக் கொண்டிருந்தனர். தற்பொழுது எங்களது திராவிட மாடல் ஆட்சியை மக்கள் நம்பிக்கையோடு பார்ப்பதோடு, இந்த லட்சிய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்று கூறுகின்றனர்.
இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு உறுதியாக பாடுபட்டு வருகின்றேன். எதிர்கால தமிழகத்திற்கு, வளமான தமிழகத்திற்கு, மக்களை தேடி மருத்துவம், விடியல் பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, உள்ளிட்ட பல திட்டங்களை வழங்கி வருகிறோம். ஊட்டத்தை உறுதி செய் திட்டம் முதல் கட்ட தொடக்கத்தில் 26 ஆயிரத்து 705 குழந்தைகளின் வீட்டுக்கு நேரடியாகவே சென்று, ஊட்டச்சத்து வழங்கியதால் 77.33 விழுக்காடு குழந்தைகள் இயல்பு நிலமைக்கு திரும்பி உள்ளனர். இரண்டாம் கட்டமாக இன்று வாரணாசி யில் 22 கோடி மதிப்பீட்டில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஆட்சி. கட்சி அரசியல். தேர்தல் ஆகியவற்றை தாண்டி மிக மிக நலிந்த மக்கள் விளிம்பு நிலை மக்கள் ஆகியோரின் மேம்பாட்டிற்காக பாடுபடும் மக்களாட்சியாக செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு குடும்பத்தின் தந்தையாக, உங்கள் குடும்பத் தேவைகளை அறிந்து அவற்றை செயல்படுத்தி வருகின்றேன். காலை உணவு திட்டத்தால் 12 லட்சம் குழந்தைகள் சத்தான உணவை உண்டு வருகின்றனர். ஊட்டத்தை உறுதி செய்யும் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் உள்ளிட்ட திட்டங்களால் ஒவ்வொரு வீட்டிலும் அனைவரின் மனங்களிலும் என்றும் நிலைத்து, அழிக்க முடியாத ஸ்டாலினாக நான் இருப்பேன். எனவே எனது ஆட்சிக்கு என்றும் துணையாகவும், ஆதரவையும் மக்கள் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அரியலூர் மாவட்டம் வாரணவாசி மருதையாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படும். கால்நடை பராமரிப்பு ஒருங்கிணைந்த அலுவலகம் உருவாக்கப்படும். பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.26 கோடி செலவில் மருதையாற்றில் உயர்மட்ட பாலம் கட்டப்படும். அரியலூரில் ரூ.101.5 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்கப்படும். பெரம்பலூர் அரசு மாதிரி பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், வாரணவாசி அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தின் 2ம் தொகுப்பைத் முதல்வர் தொடங்கி வைத்து 15 தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். அப்போது அங்குள்ள குழந்தைகளுக்கு முதல்வர் சாக்லேட் வழங்கினார்.
மேற்கண்ட விழாக்களில் அமைச்சர்கள் கே. என். நேரு, சிவசங்கர், கீதா ஜீவன், டிஆர்பி ராஜா, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கோவி. செழியன், சி.வி. கணசேன், எம்.பிக்கள் ஆ. ராசா, திருமாவளவன், அருண் நேரு, மற்றும் கலெக்டர்கள் அரியலூர் ரத்தினசாமி, பெரம்பலூர் கிரேஸ் லால் ரின்டிகி பச்சாவ், எம்.எல்.ஏக்கள் பலரும் கலந்து கொண்டனர். முதல்வர் விழாவுக்கு சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வரவேற்றனர். பலர் கோரிக்கை மனுக்களையும் கொடுத்தனர்.