அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (26), என்பவர் வண்ணாங்குட்டை டாஸ்மாக் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஹோண்டா டியோ- இருசக்கர வாகனத்தில் மூன்று மர்ம நபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்து ரூ.2000/-பணத்தை பிடுங்கிக் கொண்டு தப்பியோடினர். இதனையடுத்து சதீஷ்குமார் அரியலூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்களின் உத்தரவின்படி, அரியலூர் நகரக் காவல் ஆய்வாளர் கோபிநாத் மற்றும் உதவி ஆய்வாளர் ராஜவேலின் (கிரைம் டீம்) தலைமையிலான காவல்துறையினர் வாரணாவாசி மருதையாறு பாலம் அருகே ரோந்து பணியில்
ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர். அவர்களை அழைத்து விசாரித்தபோது, அவர்கள் அளித்த பதில் முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் அந்த மூன்று வாலிபர்களையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் இவர்கள் அரியலூர் ராஜீவ் நகரைச் சேர்ந்த நித்தியானந்தம்(26)
த/பெ.வெங்கடேசன், பூனைக்கன்னித் தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன்(29) த/பெ.பாலையா, கல்லக்குடி கிராமத்தைச் சேர்ந்த சூரியபிரகாஷ்(24)
த/பெ.கண்ணையன், என தெரியவந்தது. இவர்களிடம் மேலும் விசாரணை செய்ததில், மேற்கண்ட எதிரிகள் 07.04.2023-ம் தேதி அன்று அரியலூர் பல்லேரி கரை அருகே நடந்து சென்ற செல்வி என்ற பெண்ணிடம், ஆறு சவரன் தங்க செயினைப் பறித்து கொண்டு ஸ்கூட்டியில் தப்பிச் சென்ற குற்றவாளிகள் என தெரியவந்தது. இதனையடுத்து எதிரிகளிடமிருந்து திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம்-01 பறிமுதல் செய்தும், மற்றும் ஆறு சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டன. மேலும் இந்த எதிரிகள் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவத்திலும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. பின் எதிரிகள் மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.