அரியலூர் மாவட்டம், விரகாலூர் கிராமம் அருகே அருண் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் குடோன் மற்றும் விற்பனை நிலையம் உள்ளது. இன்று காலை 9.30 மணி அளவில் தீபாவளி பட்டாசு தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. சுமார் 40 பேர் இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட வெடிவிபத்தில் சம்பவ இடத்தில் 11 பேர் உடல் கருகி இறந்தனர். இவர்களில் 3 பேர் பெண்கள்.
வெடிவிபத்தில் இறந்தவர்களில் 7 பேரின் உடல்கள் மட்டும் அடையாளம் காணும் அளவுக்கு முழுவதுமாக கிடைத்தது. 2 உடல்கள் தலை இல்லாமல் சிதறி கிடந்தது. 2 உடல்கள் முழுவதுமாக சிதறி காணப்பட்டது. அவற்றை சேகரித்து அது 2 பேர் என கணக்கிடப்பட்டுள்ளது.
சுமார் 4 மணி நேரம் வெடிவிபத்து, தீவிபத்து நீடித்தது. அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். அப்போது அந்த பட்டாசு தயாரித்த கட்டிடம் இடிந்து தரைமட்டம் ஆனது. அதனை இப்போது ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றும் பணி நடக்கிறது. இதில் மேலும் சடலங்கள் கிடைக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. காயமடைந்த 6 பேர் தஞ்சை அரசு ஆஸ்பத்திரியிலும் 7 பேர் அரியலூர் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வெடிவிபத்து பற்றிய தகவல் அறிந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், சிறு காயங்கள் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.