அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் அன்னலெட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டபத்தில், அரியலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்ப்பண்பாட்டுப் பேரமைப்பு மற்றும் பள்ளிக்கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) இணைந்து நடத்தும் 8-வது அரியலூர் புத்தகத் திருவிழா மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமியால் 20.03.2025 அன்று துவக்கி வைக்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த புத்தகத் திருவிழா 20.03.2025 வியாழக்கிழமை முதல் 29.03.2025 சனிக்கிழமை வரை தொடர்ந்து நடைபெறுகிறது. புத்தகத் திருவிழா நடைபெறும் நாட்களில் தினமும் காலை நேரங்களில் ஒவ்வொரு துறைகளின் சார்பில் பல்வேறு போட்டிகளும், மாலை நேரங்களில் நட்சத்திர பேச்சாளர்களின் கருத்துரை நிகழ்ச்சிகளும் நடத்திட மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புத்தகத் திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்றையதினம் (21.03.2025) 0 முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
இதன்படி 0 முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டி, திருக்குறள் ஒப்பித்தல் போட்டி, கொழு கொழு குழந்தைகள் போட்டி, கதை சொல்லுதல் போட்டி (Story telling) உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் மொத்தம் 88 குழந்தைகள் கலந்துகொண்டனர். குழந்தைகளுக்கான மாறுவேடப் போட்டியில் குழந்தை சசி முதல் இடத்தையும், குழந்தை கவிதேவன் இரண்டாம் இடத்தையும். குழந்தை திவினேஷ் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் குழந்தை தனியஸ்ரீ
முதல் இடத்தையும், குழந்தை தரணிகா இரண்டாம் இடத்தையும், குழந்தை யுவகிருஷ்ணன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். கதை சொல்லுதல் (Story telling) போட்டியில் குழந்தை யசோதா முதல் இடத்தையும், குழந்தை முகிலன் இரண்டாம் இடத்தையும், குழந்தை வித்யா மூன்றாம் இடத்தையும் பெற்றனர். மேலும் கொழு கொழு குழந்தைகள் போட்டியில் குழந்தை பேபி முதல் இடத்தையும், குழந்தை ஷஸ்விகா இரண்டாம் இடத்தையும், குழந்தை குகன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கு கலந்து கொண்டதற்கான சான்றிதழ்களும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டது. மேலும், போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மாலையில் பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும், இசைப்புயல் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவில் மனுஷியபுத்திரன் கருத்துரை வழங்கினார்.
மேலும் புத்தகத் திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று 22.03.2025 சனிக்கிழமை காலை 11 மணிக்கு மகளிருக்கான ரங்கோலிக் போட்டிகளும், மாலை 5 மணிக்கு பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழச்சி, திருச்சி கலைப்பண்பாட்டு மையம் சார்பில் சிவசக்தி தப்பாட்டக்கலைக்குழுவினரின் பறையிசை நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து, மாலை 6.30 மணிக்கு “அரியலூரை அலங்கரித்த ஆளுமைகள்” என்ற தலைப்பின் கீழ் கவிஞர்.அரங்கன் தமிழ், தமிழ்நாடு அரசு முன்னாள் தலைமை செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., (ஓய்வு) அவர்களின் கருத்துரை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் க.அன்பரசி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, அரசு அலுவலர்கள், பெற்றோர்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.