அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 20ம்தேதி ரஞ்சித் குமாரின் தந்தை வீட்டு சுவர் கட்ட முயன்ற போது ஏற்பட்ட தகராறில், சித்தப்பா மகன்களான ஜெயங்கொண்டம் காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் காவலராக பணிபுரிந்து வரும் சரண்ராஜ் மற்றும் அவரது தம்பி சத்தியமூர்த்தி ஆகியோர் ராணுவ வீரரின் தந்தை, தம்பி, தங்கை ஆகியோரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் ரஞ்சித் குமாரின் தந்தை புகார் அளித்துள்ளார்.
இவரது மனு மீது எந்தவித நடவடிக்கை எடுக்கப்படாததால் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கு ரஞ்சித் குமார் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று ராணுவ உடையுடன் வந்த ராணுவ வீரர் ரஞ்சித்குமார்,
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து, தமது குடும்பத்தாருக்கும் நீதி வேண்டும் எனக்கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு இந்த நிலைமையா என்று கூறி கதறினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், ராணுவ வீரர் ரஞ்சித்குமாரை தரதரவென்று இழுத்துச் சென்றனர். ரஞ்சித் குமார் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து தனது குறைகளை முறையிட வேண்டும் என்று பலமுறை கூறியும், அதனைக் கண்டு கொள்ளாமல் காவல்துறையினர் அவரை சுற்றி வளைத்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் சிறிது நேரம்
ராணுவ வீரருக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பல காவலர்கள் சூழ்ந்து ரஞ்சித் குமாரை மடக்கி கட்டிப்பிடித்து தங்களது காவல்துறை அறைக்குள் இழுத்துச் சென்றனர். அந்த அறை ஜன்னல் கம்பிக்குள்கின்றவாறு ராணுவ வீரர் ரஞ்சித்குமார் தனது குடும்பத்திற்கு ஏற்பட்ட விண்ணல்களை பகூறி கதறி அழுதார். இதன் பின்னர் காவலர்கள் ரஞ்சித் குமாரை விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இச்சம்பவம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.