ஆண்டுதோறும் ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை திரளாக சென்று செலுத்துவது வழக்கம். அரியலூர் நகரில் இன்று நான்காவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு கள்ளக்குடி திரெளபதி அம்மன் கோவில், பூக்காரத் தெரு பூக்கார மாரியம்மன், கைலாசநாதர் கோவில் தெரு ராஜமாரியம்மன், அம்பேத்கார் நகர் மாரியம்மன், கீழத்தெரு தேச முத்து மாரியம்மன் ஆகிய ஐந்து ஆலயங்களுக்கும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். அரியலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள செட்டியரிக்கரையில் இருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகளின் வழியே பக்தர்கள் சென்றனர். மயில் அழகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், 20 அடி நீள கம்பி அளவுக்கு குத்தியும், பாலகர் முதல் பெரியவர் வரை பால்குடம் எடுத்து ஊர்வலத்தில் சென்றனர் மயில் அழகு குத்தியவர்களும்
தீச்சட்டி ஏந்தியவர்களும், வழி நெடுகிலும் அம்மன் அருள் பெற்று, ஆடியவாறு சென்றது, பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. பின்னர் ஐந்து கோவில்களிலும் பக்தர்கள் எடுத்து வந்த பால் குடத்தில் இருந்த பால் பால் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பட்டுப் புடவைகளால் மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்ட அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.