அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.10.56 கோடி மதிப்பீட்டில் 1,735 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி, அரசின் சார்பில் செயல்படுத்தபடும் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, அரசு செயலாளர் சிறப்பு திட்ட செயலாக்கம் மரு.தரேஸ் அஹமது, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேரும் வகையில் அரசு தனிக்கவனம் எடுத்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில் அரசின் திட்டங்கள் குறித்தும், அரசின் சார்பில்
செயல்படுத்தப்படும் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்தும், தமிழ்நாடு முழுவதும் தொடர்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றையதினம் அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அரசின் சார்பில் செயல்படுத்தபடும் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பொது சுகாதாரம், வருவாய்த் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, தொழிலாளர் நலன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தாட்கோ, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் 1,735 பயனாளிகளுக்கு ரூ,10,56,50,400 மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முன்னதாக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று இம்மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டார்.
பின்னர், மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், முதல்வரின் முகவரி திட்டம், இ-சேவை மையம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் (ஊரகம்), சமத்துவபுரங்களின் எண்ணிக்கை, செயல்பாடு மற்றும் புணரமைப்பு பணிகள், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் சுய உதவிக்குழுக்கள் கடனுதவி இணைப்பு திட்டம், திறன் பயிற்சி, நுண்ணீர் பாசன செயல்பாடுகள், உழவர் சந்தைகளின் எண்ணிக்கை மற்றும் செயல்பாடுகள், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், பயிர் கடன், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள், பணி முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் வழங்கும் மனுக்களின் மீது அலுவலர்கள் கூடுதல் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதே போன்று கல்வி, மருத்துவ உதவிக் கேட்டு வரும் மனுக்களின் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் வழங்கும் மனுக்களுக்கும் முன்னுரிமை அளித்து தீர்வு காண வேண்டும். இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் ஒவ்வொரு துறை சார்ந்தும் தெரிவித்தபடி முடிக்க வேண்டிய பணிகளின் கால அளவிற்குள் பணிகளை முடிக்க சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதே போன்று துறை சார்ந்த கோரிக்கைகள் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அதனை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்று சேரும் வகையில் அலுவலர்கள் தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுகாதாரத் துறைக்கும் முக்கியத்துவம் கொடுத்து அதிக நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். நான் முதல்வன், இல்லம் தேடிக் கல்வி, புதுமைப்பெண் திட்டம், பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் போன்ற சிறப்பான திட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி ஏழை, எளிய கிராமப்புற மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் பள்ளி, கல்லூரிக்கு இவர்களை அழைத்து வரும் வகையில் அலுவலர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்ததை போன்று ஏழை, எளிய மக்கள் வழங்கும் மனுக்களை வெறும் காகிதமாக பார்க்காமல் அவர்களது வாழ்க்கையாக உணர்ந்து பார்ப்பதுடன் அவர்களது மனுக்களை நிராகரிக்காத வகையில் மனுக்களுக்கு தீர்வு காணவேண்டும். மேலும், அரியலூர் மாவட்டத்தில் அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி பொதுமக்களுக்கு சிறப்பான சேவை புரிய வேண்டும் என மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
பின்னர் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க அரியலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் ஒவ்வொரு துறை சார்ந்தும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பணிகளின் எண்ணிக்கை, பணி முன்னேற்றம்; நிலுவையில் உள்ள பணிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் விரிவாக கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது. நிலுவையில் உள்ள பணிகளை குறிப்பிட்ட கால அளவிற்குள் விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வளர்ச்சித்திட்ட பணி முன்னேற்றம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினால் மீண்டும் ஆய்வு செய்யப்படும். அரியலூர் நகராட்சியை விரிவுப்படுத்த துறை சார்ந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குறைகள் சரிசெய்யவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.
பின்னர், மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரியலூர் ஒன்றியம், தாமரைக்குளத்தில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.12.90 கோடி மதிப்பீட்டில் அரியலூர் – ஜெயங்கொண்டம் சாலை (வழி) செந்துறை கி.மீ 2/0-19/2 வரை இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி உறுதிப்படுத்துதல் மற்றும் தடுப்பு சுவர்வடிகால் மையத் தடுபான், சிறுபாலம் திரும்ப கட்டுதல், சிலாப் கல்வெர்ட்டை அகலப்படுத்துதல் மற்றும் கல்வெர்ட் திரும்ப கட்டுதல் பணியில் சாலையின் தரத்தினை இரண்டு இடங்களில் சாலையை துளையிட்டு சாலையின் தரத்தினை பரிசோதனை செய்து ஆய்வு செய்தார். சாலை பணிகளை மழைக்காலத்திற்கு முன்பாக விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமெனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்(பொ) பாலமுரளி, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர்(பொ) ஆறுமுகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், விஜயலட்சுமி, கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் தீபாசங்கரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் உத்தண்டி, அரியலூர் நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், வருவாய் கோட்டாட்சியர்கள், துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், சுகாதாரத்துறை, மாவட்ட நிலை அனைத்துத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.