Skip to content

அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்தாகிறது

மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா அரிட்டாபட்டி, வல்லாளபட்டி, புலிப்பட்டி, செட்டியார்பட்டி, எட்டிமங்கலம், மாங்குளம், நாயக்கர்பட்டி உள்ளிட்ட 11 கிராமங்கள் அடங்கிய நாயக்கர்பட்டி பிளாக் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது. இதற்கான ஒப்பந்தத்தை வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு கடந்த நவ. 7ல் வழங்கியது. டங்ஸ்டன் சுரங்க திட்டத்தால், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள அரிட்டாபட்டி பல்லுயிர் மரபுத்தளம் வீணாவதுடன், பெரியாறு பாசன விவசாய நிலங்கள் தரிசாகும் சூழலும் உருவானது.

 இதற்கு  தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் உடனடியாக ஒன்றிய அரசிடம் வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதை தொடர்ந்து ஒன்றிய அரசிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து டிச.24ல் அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ஒன்றிய அரசு உத்தரவிட்டது. டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், ஒருபோதும் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்றும் தமிழ்நாடு அரசு உறுதியாக இருந்த நிலையில், திட்டத்தை கைவிட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில்  பேச்சுவார்த்தை நடத்த, மேலூர், அரிட்டாப்பட்டி கிடாரிப்பட்டி உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களான மகாமுனி அம்பலம், ஆனந்த், போஸ், முருகேசன், முத்துவீரணன், சாமிக்கண்ணு, ஆனந்த் ஆகியோரை பாஜ மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசன், மதுரை மாவட்டத் தலைவர் மகாசுசீந்திரன், புறநகர் மாவட்டத்தலைவர் ராஜசிம்மன் ஆகியோர் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் டில்லியில் ஒன்றிய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேசவுள்ளனர். இவர்களை சந்தித்து பேசிய பின்னர், அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்வது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடலாம் எனக்கூறப்படுகிறது.