அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்தும், இடைக்கால ஜாமீன் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த 3-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பேசிய நீதிபதிகள், தற்போது தேர்தல் நடைபெறும் சூழல் என்பதால் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை, இடைக்கால ஜாமீன் வழங்கினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என கூறியது. தொடர்ந்து இந்த வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதையடுத்து, இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கினால் அரசு தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட முடியாது என அரவிந்த கெஜ்ரிவால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கில் மே 10ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கண்ணா தெரிவித்துள்ளார். கடந்த முறை விசாரணையின் போதே, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் கிடைத்துவிடும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வருகிற வெள்ளிக்கிழமையாவது இடைக்கால ஜாமீன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக எழுந்துள்ளது.
