நன்றி: அரசியல் அடையாளம்…
பொன்மலை சகாயமும், ஸ்ரீரங்கம் பார்த்தாவும் சுப்புனி காபி கடையில் காத்திருக்க லேட்டாக வந்து சேர்ந்தார் காஜா பாய். என்ன பாய் நாலஞ்சு நாளா ஆளயே காணோம் என சகாயம் கேட்க, ஈரோடு போயிருந்தேன் என்றார். ஈரோடு தேர்தல் எப்படி இருக்கு, யார் ஜெயிப்பாங்க என்று பார்த்தா கேட்க, ஈரோடு போய் வந்த கதையை சொல்ல ஆரம்பித்தார் காஜா பாய்.
ஆளுங்கட்சியான திமுகவுக்கு இது முதல் இடைத்தேர்தல், அதோடு ஆட்சிக்கு நன்சான்றிதழ் வழங்கும் எடைத்தேர்தலும் கூட. முதல்வர் ஸ்டாலின் கூட பிரசாரத்தில் இதைத்தான் குறிப்பிட்டார். எனவே வாக்கு வித்தியாசம் 1 லட்சம் இருக்க வேண்டும் என்று களப்பணி ஆற்றினார்கள். இலக்கை எப்படியும் எட்டி விடுவோம் என்று அவர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
எதிர் முகாமில் முக்கிய வேட்பாளர் அதிமுக எடப்பாடி அணியின் தென்னரசு. இவர் இதே தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும் கூட. தேர்தலில் வெற்றி கிடைக்கிறதோ, இல்லையோ அதற்கு முன்பாக 2 வெற்றிகளை எடப்பாடி பெற்று விட்டார். ஒன்று, கடந்தாண்டு ஜூலை 11 சென்னை வானகரத்தில் நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. இந்த பொதுக்குழுவில் தான் எடப்பாடி, தற்காலிக பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்னொரு வெற்றி இடைத்தேர்தலில் எடப்பாடி அணி வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தது. இந்த 2 வெற்றிகளாலும் எடப்பாடி முகாம் மிகுந்த உற்சாகத்தில் உள்ளது. இடைத்தேர்தலில் டெபாசிட் வாங்கினாலே போதும் என்கிற அளவுக்கு எடப்பாடி அணியினர் பேசிக்கொள்கின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பு முறையீடு செய்துள்ளது. இதிலும் தங்களுக்கு சாதகமாகவே நடக்கும் என்ற நம்பிக்கையில் எடப்பாடி பழனிசாமி உள்ளார். இந்த குதூகலத்தோடு, டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை திறந்து வைக்கவும் எடப்பாடி தயாராகி வருகிறார்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது தான், டெல்லியில் அ.தி.மு.க. அலுவலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.8 கோடி செலவில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து டெல்லி அ.தி.மு.க. அலுவலகம் திறப்பு விழாவுக்காக தயார் நிலையில் உள்ளது. இருப்பினும் கட்சியில் ஏற்பட்டிருந்த குழப்பம் காரணமாக அலுவலக திறப்பு விழா தள்ளிப்போய் கொண்டே இருந்தது. இந்த நிலையில்தான் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு சுப்ரீம் கோர்ட் அங்கீகாரம் அளித்துள்ளது. இதையடுத்து அலுவலக திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் ஜரூராக நடந்து வருகிறது. வரும் ஏப்ரல் மாதம் திறப்பு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் டெல்லி அ.தி.மு.க. அலுவலகத்துக்கு ஏதாவது ஒரு வகையில் முட்டுக்கட்டை போடலாமா? என்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன என்று காஜா பாய் சொல்லி முடித்தார்.
ஆளுங்கட்சி இளம் எம்எல்ஏ முதல்வரிடம் திட்டு வாங்கிய கதை தெரியுமா என்று ஆரம்பித்தார் சகாயம். என்ன சகாயம் அது என்று பார்த்தா கேட்க, கடந்த வாரம் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின், திருச்சி விமான நிலையம் வந்தார். அவரை வரவேற்க உள்ளூர் திமுகவினர் யாரும் வரவில்லை. அதே சமயம், டெல்டா மாவட்டத்தை சேர்ந்த கிங்ஙான பெயர் கொண்ட ஒரு எம்எல்ஏ மட்டும் வரவேற்க வந்திருந்தார். அவரை ஏறெடுத்த பார்த்த முதல்வர், ஏன் நீங்க ஈரோட்டுக்கு செல்லவில்லையா என்று கடுகடுத்த குரலில் கேட்டுள்ளார். ஏதோ சொல்லி அந்த இடத்தில் எம்எல்ஏ சமாளித்துள்ளார். ஆனாலும் முதல்வர் அவர் மீது கோபத்துடனே அங்கிருந்து கிளம்பி சென்றாராம், என்று சொல்லி முடித்த சகாயம், ஈரோட்டில் எப்படியும் வெற்றி உறுதி என்ற மகிழ்ச்சியில் தமிழக காங்கிரசார் இருக்கும் நிலையில், அகில இந்திய அளவில் காங்கிரசார் அதிர்ச்சி அடையும் வகையில் சோனியாவின் பேச்சு அமைந்து விட்டது என்று பீடிகை போட்டார்.
யோவ் சகாயம் சொல்ல வந்ததை முழுசா சொல்லுயா என்று மற்ற 2 பேரும் கேட்க, சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய சோனியா காந்தி, ராகுல் காந்தியின் யாத்திரை பயணத்தோடு எனது அரசியல் பயணமும் நிறைவு பெறுகிறது என்று பேசி உள்ளார். அதாவது அரசியலில் இருந்து அவர் ஓய்வு பெற முடிவெடுத்து விட்டார் என்று காங்கிரஸ் வட்டாரத்தில் பேசிக்கொள்கின்றனர். அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சோனியாவின் இந்த முடிவு காங்கிரசாரிடையே அதிர்ச்சியை தான் ஏற்படுத்தி உள்ளது என்று சகாயம் சொல்லி முடிக்க, மூவரும் பெஞ்ச்சை காலி செய்தனர்.