நன்றி : அரசியல் அடையாளம் வார இதழ்….
பொன்மலை சகாயம், ஸ்ரீரங்கம் பார்த்தசாரதி, சந்துக்கடை காஜா பாய் மூவரும் சுப்புனி காபி கடை பெஞ்ச்சில் அமர்ந்திருக்க காஜா பாய் மட்டும் ஒரு வித பரபரப்பில் இருந்தார். என்ன பாய் ஏதோ பரபரப்பாக இருக்கிறாய் என இருவரும் கேட்க, நான் மட்டுமா பரபரப்பாக இருக்கிறேன். இரண்டு விஷயங்களில் திருச்சியே பரபரப்பாக தான் இருக்கிறது என்று பீடிகை போட்ட படியே தகவல்களை சொல்ல ஆரம்பித்தார் காஜா பாய்.
முதல் தகவல், திருச்சி எஸ்பி அலுவலகம் பற்றியது. எஸ்பியாக இருப்பவர் வருண்குமார். இவர் வந்ததில் இருந்து எஸ்பி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் புறநகர் பகுதி காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்களை இருக்கி பிடிக்கிறாராம். அதாவது எஸ்பி அலுவலகத்தில் பேசப்படும் சில தகவல்கள் வெளியில் கசிகின்றதாம். இதை கண்டுபிடிக்க எஸ்பி அலுவலக ஊழியர்களின் கால் டீடெய்ல்ஸ்களை கேட்டு வாங்குகிறாராம். இதனால் எஸ்பி அலுவலக ஊழியர்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் மற்ற அதிகாரிகளிடம் பேசவே அஞ்சுகிறார்கள். இந்த கெடுபிடியை தாக்குப்பிடிக்க முடியாமல் ஒரு சினிமா நடிகர் பெயர் கொண்ட எஸ்பி இன்ஸ்பெக்டர் செல்போனையே சுவிட்ச் ஆப் செய்து விட்டு விடுமுறையில் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
அதேபோல் குளித்தலையை சேர்ந்த ஒரு பெண் காவலர் எஸ்எம்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிகிறார். இவர் சரியான நேரத்துக்கு பணிக்கு வருவதில்லை எனக்கூறி துறையூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டு விட்டார். வீடு குளித்தலையில் உள்ளது. பணி துறையூரில் இருந்தால் எப்படி என அவர் புலம்புகிறாராம் என்று காஜா பாய் சொல்லி முடிக்க, அதிகாரி ஸ்ட்ரிட்டாக இருந்தால் இப்படி பிரச்னைகள் வரத்தான் செய்யும் என சகாயம் கூற மற்றவர்கள் சிரித்துக்கொண்டனர்.
2வது தகவல் என திருச்சியில் தாசில்தார் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பற்றி பேச ஆரம்பித்தார் காஜா பாய். திருச்சி காஜாமலை பகுதியில் ஏ.சி.எல். என்ற சாப்ட்வேர் நிறுவனத்தை பக்கிரிசாமி, கார்த்திகேயன், ரெங்கநாதன் உள்ளிட்ட 4 பேர் நடத்தி வந்தனர். இவர்கள் கடந்த 2012-ம் ஆண்டு கனரா வங்கியில் ரூ.22 கோடி கடன் வாங்கிவிட்டு 2019-ம் ஆண்டு நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகினர். இதனையடுத்து வங்கியில் பெற்ற கடனுக்காக மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் உத்தரவின்படி காஜாமலை பகுதியில் உள்ள அவர்களுக்கு சொந்தமான ரூ.44 லட்சம் மதிப்புள்ள வீட்டை மண்டல துணைதாசில்தார் பிரேம்குமார், கனரா வங்கி ஊழியர்கள் ஜப்தி செய்ய சென்றனர். அப்போது, அடையாளம் தெரியாத 20-க்கும் மேற்பட்ட நபர்கள் சரமாரியாக உருட்டு கட்டைகளால் தாக்கினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயம் அடைந்த துணை தாசில்தார் பிரேம்குமார், வங்கி ஊழியர்கள் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதைக்கண்டித்து திருச்சி வருவாய்த்துறை அலுவலர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இந்த விவகாரத்தை திடீரென அதிமுகவும், பாஜகவும் கையிலெடுத்துள்ளன. அதாவது, இந்த விவகாரத்தில் திமுகவின் முன்னாள் நிர்வாகி ஒருவருக்கு தொடர்பு கூறி, அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வரும் புதன்கிழமை திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அதிமுகவும், பாஜகவும் அறிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் திமுக பிரமுகருக்கு தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அப்படி இருக்கும்போது எப்படி வழக்குப்பதிவு செய்ய முடியும் என காவல்துறை கையை பிசைந்து நிற்கிறது என காஜா பாய் கூறினார்.
அரசியல் செய்தி எதுவும் இல்லையா என பார்த்தா கேட்க,என்னிடம் இருக்கிறது என கூறிய சகாயம், கடந்த 21ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பிறந்த நாள். வழக்கமாக அவர் பிறந்த நாளை கொண்டாடுவதில்லை. அன்றைய தினம் முதல்வர் மு.க.ஸ்டாலினை மட்டும் சந்தித்து ஆசி பெறுவார். வேறு யாரையும் சந்திக்க மாட்டார். இப்போது அவர் புழல் சிறையில் உள்ளார். இதுவரை பார்வையாளர்கள் யாரையும் சந்திக்காத செந்தில் பாலாஜி, பிறந்த நாளன்றும் அவ்வாறே இருந்தார்.
அதேசமயம் இந்த முறை செந்தில் பாலாஜி பிறந்த நாளை கரூர் மாவட்ட திமுகவினர் கலக்கி விட்டனர். குறிப்பாக சமூக வலைதலங்களில் செந்தில் பாலாஜிக்கு வாழ்த்து தெரிவித்து ஏராளமான மீம்ஸ்களை போட்டிருந்தனர். கடந்த காலங்களை விட இந்த முறை, மீம்ஸ் வாழ்த்துக்கள் அதிகளவில் இருந்ததாக நெட்டிசன்கள் கூறுகின்றனர் என சகாயம் சொல்லி முடிக்க காபி கடை பெஞ்ச் காலியானது.