Skip to content
Home » இசை கச்சேரி……டிக்கெட் நகலை அனுப்புங்கள்… ஏஆர் ரஹ்மான் வேண்டுகோள்

இசை கச்சேரி……டிக்கெட் நகலை அனுப்புங்கள்… ஏஆர் ரஹ்மான் வேண்டுகோள்

  • by Senthil

ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள பனையூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண ஆயிரக்கணக்கானோர் பனையூரில் குவிந்தனர். இதனால், ஈசிஆர் சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர்.

அதேவேளை, நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பலரும் நெரிசலில் சிக்கித்தவித்தனர். உரிய டிக்கெட்டுகள் இருந்தும் பலர் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்குள் அனுமதிக்கப்படவில்லை. நிகழ்ச்சியை காணவந்த பெண்கள், குழந்தைகள் என பலரும் பாதிக்கப்பட்டனர். இசை நிகழ்ச்சி அரங்கில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்ததது. மேலும், இருக்கை வசதியின் எண்ணிக்கையை விட இரு மடங்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்பு உள்பட போதிய முன்னேற்பாடுகளை செய்யவில்லை என நிகழ்ச்சியை பார்க்க வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற ரசிகர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக பலரும் தங்கள் அதிருப்தியை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவர்கள் டிக்கெட் நகலை பகிருமாறு ரசிகர்களுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அன்பான சென்னை மக்களே, டிக்கெட் வைத்திருந்தும் துரதிருஷ்டவசமான சூழ்நிலையால் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்குள் நுழையாதோர் உங்கள் டிக்கெட் நகலை arr4chennai@btos.in அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். எங்கள் குழு உங்களுக்கு விரைவில் பதிலளிக்கும்’ என தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!