Skip to content
Home » தமிழ்…… தாய் மொழி என்பதே என் அடையாளம்….நியூசிலாந்து வரவேற்பில் அப்பாவு பேச்சு

தமிழ்…… தாய் மொழி என்பதே என் அடையாளம்….நியூசிலாந்து வரவேற்பில் அப்பாவு பேச்சு

  • by Senthil

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்ற 67-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்துகொண்டு உரையாற்றினார். அங்கிருந்து மெல்போர்ன், கெயின்ஸ் நகரங்களுக்கு பயணம் செய்தார். பின்னர் நியூசிலாந்து நாட்டிற்கு சென்றார். அங்கு ஆக்லாந்து நகரிலுள்ள தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அப்பாவு உரையாற்றியதாவது:

சிங்கப்பூர், மலேசியா, கனடா போன்ற நாடுகளில் ஏராளமான தமிழர்கள் இருப்பார்கள். தமிழ்நாட்டில் பட்டம் படித்து, பொறியாளர் என்ற பட்டத்தோடு இங்கே வந்திருக்கிறீர்கள். இங்கே இருக்கின்ற மொழியோடு நீங்கள் சங்கமம் ஆகியுள்ளீர்கள். நீங்கள் கண்டிப்பாக தமிழ் பேச வேண்டுமென்கின்ற அவசியம் இங்கே இல்லை.

ஆங்கில மொழியை தமிழ்நாட்டிலேயே கற்றுக் கொண்டுதான் நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள். இங்கே உங்களுடைய வாழ்க்கைத் தரத்தை உருவாக்கியுள்ளீர்கள். இந்த நாடு ஒரு தூய்மையான நாடாக இருக்கிறது. இந்த நாட்டிற்கு நாம் வேலைக்காக வந்துள்ளோம். இங்கே உங்களை நான் சந்தித்ததில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இந்தியாவில் தோன்றிய மொழிகளில் தமிழ் மட்டுமே பல நாடுகளில் ஆட்சி மொழியாக இருக்கிறது. இலங்கை, சிங்கப்பூர், கனடா, மொரிசியஸில் தமிழ் ஆட்சி மொழி. மலேசியாவில் கூடுதல் ஆட்சி மொழியாக தமிழ் உள்ளது. இந்தியாவில் ஆட்சி மொழியில் தமிழ் இல்லை. ஆனால், வெளிநாடுகளில் ஆட்சி மொழியாக உள்ளது. அதனால்தான் தமிழ் மொழியை படிக்க வேண்டுமென்று சொல்கிறேன்.

நான் இந்தியன், பிறப்பால் தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டவன் என்பதுதான் நம் அனைவருக்கும் அடையாளம், பெருமை. அதை ஒருபோதும் இழந்துவிடக் கூடாது. உலகில் எந்த பகுதியில் இருந்தாலும் தமிழை கற்க வேண்டும். அதற்கு என்ன உதவி வேண்டுமோ அனைத்து உதவிகளையும் செய்து தருவதற்கு  முதல்வர் ஸ்டாலின்  தயாராக உள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!