சட்டமன்றத்தில் கவர்னர் வாசிக்க மறுத்த உரையின் தமிழ் ஆக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதன் விவரம் வருமாறு: 1 டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார இலக்கை நோக்கி நமது அரசு செயல்படுகிறது. மெட்ரோ ரயில் 2ம் கட்ட விரிவாக்க திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. 50:50 சதவீதம் என்ற அடிப்படையில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. அதே நேரத்தில் மற்ற மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
சட்டம், ஒழுங்கில் தமிழகம் முன்னுதாரணமாக செயல்படுகிறது.
1 கோடியே 15 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரி்மைத் தொகை வழங்கி தனது தேர்தல் வாக்குறுதியை அரசு நிறைவேற்றி உள்ளது. 2023 செப்டம்பர் 15ல் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளது.
சென்னை, தூத்துக்குடி வெள்ளம் போன்ற இயற்கை பேரிடரை அரசு திறமையாக கையாண்டது. 1989ல் கலைஞரால் தொடங்கப்பட்ட மகளிர் சுயஉதவிக்குழு இப்போது விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. மேலும் சுயஉதவிக்குழு க்களுக்கு 30 ஆயிரம் கோடி வரை வங்கி கடன் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
நம் நாட்டிற்கே முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்கிறது. 1962ல் முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 1982ல் முதல்வர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு கலைஞர் சத்துணவில் முட்டை கொடுத்தார். தற்போது முதல்வர் ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை தொடங்கி உள்ளார். இந்த திட்டத்தை பெரும்பாலான மாநிலங்கள் பின்பற்றத் தொடங்கி உள்ளன.
குற்றச்செயல்களை தடுப்பதில் அரசு சமரசமற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது. புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34% அதிகரித்து உள்ளது. மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை(சிஏஏ) தமிழகத்தில் ஒருபோதும் அமல்படுத்துவதில் என்பதில் அரசு உறுதியுடன் உள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வர்ச்சியே திராவிட மாடல் ஆட்சி. தமிழகத்தை ஒன்றிய அரசு புறக்கணிக்கிறது.
மீனவர் நலனில் அரசு அக்கறை கொண்டுள்ளது. இலங்கை கைது செய்துள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க தொடர்ந்து ஒன்றிய அரசை தமிழக அரசு வலியுறுத்தும். மேகதாது அணை கட்ட அனுமதி்க்கமாட்டோம். மாநில நலன்களை மேம்பாடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக நடத்த பிரதமரை கேட்டுக்கொள்கிறோம். 2 லட்சம் புதிய வேளாண் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து பேசி வருகிறார்.