சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் (ஐஎக்ஸ்689) புறப்பட்டது. அதில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியைச் சேர்ந்த 32 வயது பயணியும் பயணித்துள்ளார். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் விமான பணியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அவருக்கு முதலுதவி அளித்துள்ளனர். இலங்கை வான் பகுதியில் வந்தபோது, அந்த பயணி இருக்கையிலிருந்து சரிந்துள்ளார். இதைக்கண்ட சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த விமானி, பயணிக்கு அவசர சிகிச்சை அளிக்க வேண்டியிருப்பதையடுத்து மருத்துவ உதவிக்காக விமானத்தை அவரசரமாக இலங்கை தலைநகர் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறக்கினார்.
விமான நிலையத்தில் மருத்துவக்குழுவினர் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக விமானம் சில மணிநேரம் கொழும்பு நகரில் காத்திருந்து அதன் பின்னர் திருச்சிக்கு பிற்பகல் 3.30 க்கு வரவேண்டி விமானம் சுமார் 1 மணி நேரம் தாமதமாக 4.50 க்கு திருச்சி வந்தடைந்தது. இறந்தவரின் உடல் கொழும்பு நகரில் இருப்பதாக கூறப்படுகிறது.