கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது கரூர் மாவட்டத்தில் ரத்தம் உறையாமை (ஹீமோபீலியா) நோயால் பாதிக்கப்பட்ட நோயாளியின் உறவினர்கள் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் ரத்த உறையாமை நோயால் பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் உடலில் ஏதாவது சிறு காயம் ஏற்பட்டால், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று அதற்கான மருந்து ( FACTOR 8 ) ஊசி மூலம் செலுத்திக் கொள்ள வேண்டும் இல்லாவிடில் ரத்தம் உறையாத நிலை ஏற்படும்.
ஆனால், கடந்த 2 மாதங்களாக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரத்த உறையாமை நோய்க்கான மருந்து இருப்பு இல்லாத காரணத்தால், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதேபோன்று திருச்சி, மதுரை,சேலம், திண்டுக்கல் என அருகில் உள்ள மாவட்டங்களிலும் ரத்த உறையாமை நோய்க்கான மருந்து இல்லாததால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ரத்த உறையாமை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே உள்ள நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் ரத்த உறையாமை நோய்க்கான மருந்து தட்டுப்பாடு இல்லாமல், கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.