தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
17 மணி நேர சோதனைக்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட செந்தில் பாலஜிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
உடனே அவர் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதைக் கேள்விப்பட்ட அமைச்சர்கள் கே. என். நேர, உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு வந்தனர்.
இதனிடையே செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்க்க அமலாக்கத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
காரணம் எதுவும் சொல்லாமல் அவரை அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். உறவினர்கள், நண்பர்கள் யாரிடமும் அதிகாரிகள் எதுவும் சொல்லவில்லை. விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து உறுதியாக அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
கைது நடவடிக்கை என்றால் அதற்குரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. எந்த வழக்குக்காக விசாரணை நடத்தப்பட்டது என்பது தொடர்பாக அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம். கட்சித் தலைமையுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும். செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையின் கஸ்டடியில் இருப்பதால் முன் ஜாமீன் தாக்கல் செய்ய முடியாத நிலை உள்ளது’ என்று கூறினார்.