புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில், பாலின சமத்துவ உறுதிமொழியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, இ.ஆ.ப., தலைமையில் இன்று (09.12.2024) அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டு, தேசிய அளவில் பாலியல் வன்முறைக்கெதிரான பிரசார விழிப்புணர்வு குறித்த, “ஒன்றிணைவோம் குரல் கொடுப்போம்” என்ற பாலியல் வன்கொடுமைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.
பாலியல் வன்முறைக்கெதிரான பிரச்சாரத்தினை 25.11.2024 முதல் 23.12.2024 வரை நடத்திட தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகள் மற்றும் 13 ஊராட்சி ஒன்றியங்களிலும், கூட்டமைப்பு அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான சுவரொட்டிகளை ஒட்டுதல், பாலின வன்முறைக்கு எதிரான குறும்படங்கள் மற்றும் திரைப்படங்கள் காட்சிப்படுத்துதல் மற்றும் காண்பதற்கு ஊக்கப்படுத்துதல், மெழுகுவர்த்தி ஏந்தி மகளிர் சுயஉதவிக் குழுவினர் விழிப்புணர்வு பேரணி மேற்கொள்ளுதல், விழிப்புணர்வு கோலப் போட்டிகள் நடத்துதல், பிரசார உறுதிமொழி எடுத்தல், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பெண்கள் பாதுகாப்பு குறித்த சட்டங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த சட்டங்கள் குறித்த குறும்படங்கள், திரைப்படங்கள் காட்சிப்படுத்துதல், பள்ளி கல்லூரி மாணவர்களிடையே பாலியல் ரீதியான பாகுபாடு குறித்த கூட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் போட்டிகள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு பாலியல் வன்முறைக்கெதிரான பிரசாரங்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், புதுக்கோட்டை, திருவரங்குளம், அறந்தாங்கி மற்றும் விராலிமலை ஊராட்சி ஒன்றியங்களில் செயல்பட்டுவரும் பாலின வளமையத்தில், பெண்கள் பாலியல் குறித்த புகார்கள், தகவல்களை பதிவு செய்து கொள்ளலாம்.
பாலின சமத்துவ உறுதிமொழியான, “ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும் எவ்வித பாகுபாடுமின்றி சமமாக வளர்ப்போம். வீட்டு வேலைகளை பெண்களும் ஆண்களும் சமமாகப் பகிர்ந்து கொள்வோம். பெண்கள் விரும்பும் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்போம். அனைத்துத் துறை பணிகளிலும் பெண்களின் சம பங்கேற்பை உறுதி செய்வோம். பெண்களின் பெயரில் சொத்துக்களைப் பதிவு செய்வதை ஊக்குவிப்போம். அனைத்து இடங்களிலும் பெண்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தப்படுவதை அனுமதியோம். அனைத்து செயல்பாடுகளிலும் பெண்கள் சமமாக முடிவெடுப்பதை உறுதி செய்வோம்.” என்ற உறுதிமொழியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா, வாசிக்க அதனை பின்தொடர்ந்து, அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். முன்னதாக, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், சத்துணவுத் திட்டம் மூலம், சிறுதானிய உணவு விழிப்புணர்வு ஊர்வலத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் .மு.அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்து தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இந்நிகழ்வுகளில், மாவட்ட வருவாய் அலுவலர் .அ.கோ.ராஜராஜன் , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) .கே.ஸ்ருதி, உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.