அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கள்ளச்சாராயம், கஞ்சா, கள் விற்பனை, போலி மதுபானங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் முதலியவற்றை கள்ளத்தனமாக விற்பனை செய்வதை தடுப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது.
ஆய்வுக்கூட்டத்தில் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கிட கள்ளச்சாராயம், கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் ஆகியவற்றை முற்றிலும் ஒழிப்பதற்கு அரசு அலுவலர்கள் பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதை பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.
மேலும், அரியலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், கஞ்சா, கள் விற்பனை, போலி மதுபானங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்தல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை காவல் துறையின் மூலம் எடுக்கப்படும்.
மேலும் இது குறித்த தகவல் ஏதேனும் தெரிந்தால் பொதுமக்கள் எவ்வித தயக்கமும் இன்றி அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு 9489646744 என்ற அலைபேசி எண்ணிற்கு அழைத்தோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்தார்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ம.ச.கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரிணி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் விஜயராகவன், அந்தோணி அரி, வருவாய் கோட்டாட்சியர்கள் ராமகிருஷ்ணன் (அரியலூர்), ஷீஜா (உடையார்பாளையம்), துணை காவல் கண்காணிப்பாளர்கள் தமிழ்மாறன், ரகுபதி, மற்றும் மாவட்ட நிலை அலுவலர்கள், வட்டாட்சியர்கள், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.