Skip to content
Home » கோவையில் மேலும் ஒரு ஐடி பார்க், தங்கநகை உற்பத்தி வளாகம் அமைக்கப்படும்…..முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கோவையில் மேலும் ஒரு ஐடி பார்க், தங்கநகை உற்பத்தி வளாகம் அமைக்கப்படும்…..முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

  • by Senthil

கோவை அனுப்பர்பாளையத்தில்  ரூ. 300 கோடியில், 8 தளங்களுக்டன்  அமைய உள்ள  நூலகம் மற்றும்  அறிவியல் மையத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை அடிக்கல் நாட்டி  பேசினார். அவர் பேசியதாவது:

இந்த விழாவில் மாணவர்களை சந்திக்கும்போது புதிய  உத்வேகம் ஏற்படுகிறது. திமுக ஆட்சி 2021ல் ஆட்சி பொறுப்பேற்றதும் பல்வேறு நலத்திட்ட  பணிகளை தொடங்கி நடத்தி வருகிறது.  கோவை மாவட்டத்திலும் இந்த பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை கோட்டையில் இருந்து மட்டும்  துறை ரீதியாக ஆய்வு செய்யாமல்,  மாவட்டம் வாரியாக சென்று ஆய்வு நடத்த முடிவு செய்தேன். அதற்காக முதன் முதலாக தேர்வு செய்தது கோவை மாவட்டம்.

இதற்காக நேற்று காலை கோவை வந்தேன்.  பல்வேறு பணிகளை ஆய்வு செய்தேன். பணிகளை தொடங்கி வைத்தேன்.  மக்கள் பல்வேறு கோரிக்கைகள் வைத்தனர். அவற்றை கேட்டு பரிசீலித்தேன்.

இதற்கான ஏற்பாடுகளை செய்த  மாவட்ட  பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி,  துறை அமைச்சர் எ.வ. வேலு, கலெக்டர், மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு பாராட்டு, வாழ்த்துக்கள்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கம்பேக் கொடுத்து உள்ளார். அவருடைய, சிறப்பான விறுவிறுப்பான பணிகளை பார்த்து, தடைகளை ஏற்படுத்தினர். அந்த பிரச்னைகளுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. இனி  தடைகளை  உடைத்து வேகமாக  திட்டங்களை  செயல்படுத்துவார் என்பது உறுதி.

மதுரையில் கலைஞர் பெயரில் நூலகம் அமைத்தோம். சென்னையில் அண்ணா பெயரில் நூலகம் அமைத்தோம்.  கோவையிலும் அதுபோல  கலைஞர் பெயரில் ஒரு நூலகம் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வந்தது.  ஆனால் அண்ணாவையும், கலைஞரையும் உருவாக்கிய  பெரியார் பெயரை இங்கு அமையும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு சூட்டுவது தான் பொருத்தமாக இருக்கும்.  இந்த  நூலகம்  மிகச்சிறப்பாக அமையும்.  அடிக்கல் நாட்டு விழாவிலேயே இதன் திறப்பு விழா தேதியையும் கூறுகிறேன். 2026 ஜனவரியில் இந்த நூலகம், அறிவியல் மையம் திறக்கப்படும். அது தான் திராவிட மாடல் அரசு.

நேற்று எல்காட் கட்டிடத்தை திறந்து வைத்தேன். அதன் அருகிலேயே இன்னொரு  ஐடி பார்க் அமைக்கப்படும்.  நேற்று  நிலஎடுப்பு ஆணைகள் மூலம் 10 ஆயிரம் பேர் பயனடையும் வகையில் ஆணைகள் வழங்கப்பட்டது.  நேற்று தங்க நகை செய்வோரின் கோரிக்கையை ஏற்று அங்கேயே சென்று அவர்களது கோரிக்கையை கேட்டேன்.

அவர்கள் வைத்த கோரிக்கை குறித்து  அமைச்சர்கள், தலைமை செயலாளர்,  கலெக்டர் ஆகியோரிடம் ஆலோசித்தேன்.  அவர்களது கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக சில அறிவிப்புகளை இங்கேயே வெளியிடுகிறேன். கோவையில் ரூ.126 கோடியில்  தங்க நகை  உற்பத்தி தொழில் வளாகம் அமைக்கப்படும்.  அதற்கான ஆய்வகமும் அமைக்கப்படும்.  இதன் மூலம் 2 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.

கோவையில் விரையில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கும் பணி தொடங்கும்.  நேற்று அமைச்சர்கள், தலைமை செயலாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினேன். அவர்களது துறைகளில் நடக்கும் பணிகளை விரையில் முடிக்க உத்தரவிட்டு உள்ளேன்.  எங்களது மக்கள் பணி தொடரும். அதற்கான மிஷன் தான் ஆட்சி அதிகாரம்.

இந்தியாவின் 2வது பெரிய பொருளாதார மாநிலம் தமிழ்நாடு.  நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திமுக தான்.  வட மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்த்தால் தமிழகத்தின் வளாச்சி தெரியும்.  பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னேறி உள்ளது.  வட மாநிலங்களுக்கு வாரி வழங்குகிறது தமிழ்நாடு.  உங்களில் ஒருவனான எப்போதும் நான் இருப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.  முன்னதாக முதல்வர் ஸ்டாலின் செம்மொழி பூங்கா பணிகளை நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.  அவருடன் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே. என். நேரு,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி, தலைமை செயலாளர் முருகானந்தம், கலெக்டர் , மாநகராட்சி ஆணையர் ஆகியோரும் சென்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!