கரூரில் 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி சான்றிதழ் கொடுத்து பத்திரப்பதிவு செய்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், ரகு, சித்தார்த்தன், யுவராஜ், பிரவீன் உள்ளிட்ட ஏழு பேர் மீது பத்திரப்பதிவுத்துறை மேல கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல்காதர் அளித்த புகாரின் பேரில் கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணையை போலீசார் மேற்கொண்டு வந்தனர்.
முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர், பிரவீன் ஆகிய இருவருமு் கேரளா மாநிலம் திருச்சூரில் பதுங்கி இருந்தபோது சிபிசிஐடி போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்களுக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில் கரூர் நீதிமன்றம் அவர்களுக்கு 9 நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் இந்த வழக்கு சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கரின் சகோதரர் சேகர் மற்றும் தோட்டக்குறிச்சி செல்வராஜ் ஆகியோர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று இரவு இந்த வழக்கு தொடர்பாக யுவராஜை கரூர் கோவை சாலையில் போலீசார் கைது செய்து சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.