தமிழகம் முழுவதும் ‘என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று நடைபயணம் தொடங்குகிறார். ராமேஸ்வரத்தில் இருந்து இன்று மாலை இந்த பயணம் தொடங்குகிறது.
மத்திய அரசின் கடந்த 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறும் வகையில் இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. 5 கட்டங்களாக 168 நாட்களில் 234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையிலும், ஜனவரி 20-ந்தேதிக்குள் யாத்திரையை முடிக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 10 மாநகர பகுதிகளில் பொதுக்கூட்டங்களும் நடத்தப்படுகிறது. இதில் மத்திய மந்திரிகள் பங்கேற்கிறார்கள். நடைபயண தொடக்க விழா இன்று மாலை ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே நடைபெறுகிறது. இதற்காக அங்கு பிரமாண்ட மேடை பாராளுமன்ற கட்டிடம் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நடைபயணத்தை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார். இதற்காக மத்திய மந்திரி அமித்ஷா டில்லியில் இருந்து இன்று மதியம் விமானப்படைக்கு சொந்தமான தனி விமானத்தில் புறப்பட்டு மாலை 4 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தடைகிறார். அதன்பின்னர் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் மதுரையில் இருந்து புறப்பட்டு, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்துக்கு 4.50 மணிக்கு சென்று இறங்குகிறார். அங்கு ஒரு ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அமித்ஷா, அங்கிருந்து புறப்பட்டு, நடைபயண தொடக்க விழா மேடைக்கு மாலை 5.45 மணிக்கு வருகிறார். இரவு 7 மணி வரை நடைபெறும் நடைபயண தொடக்க விழா கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் ஓ.பன்னீர் செல்வம், தமாகா தலைவர் வாசன் எம்.பி, இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், தேவநாதன் யாதவ், ஜான் பாண்டியன், பூஜை ஜெகன்மூர்த்தி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்கிறார்கள்.
கூட்டத்துக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. கூட்டத்துக்கு வருகிறவர்களுக்கு பல வகை இனிப்புகளுடன் அறுசுவை விருந்தும் தயாராக உள்ளது. அதே நேரத்தில் நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலைக்கு ஆரம்பமே சறுக்கலாகவும், அதிர்ச்சியாகவும் அமைந்து உள்ளதாக பாஜகவினர் கூறுகிறார்கள்.
கூட்டணி கட்சிகளில் பிரதான கட்சியே அதிமுக தான். அதன் பொதுச்செயலாளர் எடப்பாடியை போனில் பல முறை அழைத்தும் அவர் வர மறுத்து விட்டார். உடல்நலம் சரியில்லை என கூறி பாஜக தலைவர் அண்ணாமலையை, எடப்பாடி தவிர்க்கிறார். பிறகு மேலிடம் கொடுத்த அழுத்தம் காரணமாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை அனுப்பி வைத்து உள்ளார். உதயகுமார் வருகின்ற நிலையிலும், எடப்பாடி தன்னை தவிர்த்தது அண்ணாமலையால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றே பாஜகவினர் கூறி வருகிறார்கள். எடப்பாடி வர மறுத்தது குறித்து அமித்ஷாவின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டதாம். பாத யாத்திரை முடிவதற்குள் அவரை எப்படியும் இதில் பங்கேற்க வைத்து விடலாம் என அமித்ஷா , அண்ணாமலையை தேற்றியதாகவும் பாஜகவினர் கூறுகிறார்கள்.
ராமேஸ்வரம் பொதுக்கூட்டம் முடிந்ததும் மத்திய மந்திரி அமித்ஷா, ராமேசுவரத்தில் உள்ள ஓட்டலில் பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். நாளை (29-ந்தேதி) அதிகாலை 5.45 மணிக்கு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். காலை 11 மணிக்கு ராமேசுவரத்தில் நடைபெறும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவுகள் இறப்பதில்லை என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்கிறார். அரிச்சல்முனை கடற்பகுதிக்கு சென்று பார்வையிடும் மத்திய மந்திரி அமித்ஷா, பகல் 12 மணிக்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து பேசுகிறார்.
இதையடுத்து 12.45 மணிக்கு குந்துகால் விவேகானந்தர் நினைவு இல்லம் சென்று விட்டு, மதியம் 1.20 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதுரை செல்லும் அவர், அங்கிருந்து விமானத்தில் டில்லி புறப்படுகிறார்.