பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு தானே சாட்டையடி போராட்டம் நடத்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அட ஆமாங்க… தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டு ‘திரு.மாணிக்கம்’ என்கிற படத்திற்கு நடிகர் கூல் சுரேஷ் ப்ரொமோஷன் செய்திருக்கிறார்.
இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ‘திரு.மாணிக்கம் படத்தில் அனன்யா, பாரதிராஜா, நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில், திரைக்கு வந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு ஆதரவாக கூல் சுரேஷ் வித்தியாசமாக சாட்டையால் அடித்துக் கொண்டு புரொமோஷன் செய்துள்ளார்.
இதற்கு முன்னதாக, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டத்தைக் கண்டித்து பாஜ மாநில தலைவர் அண்ணாமலை, 6 முறை சாட்டையால் அடித்தார். கோவையில், தொண்டர்களின் வெற்றிவேல் வீரவேல் கோஷத்திற்கு இடையே தன்னைத் தானே சாட்டையால் அடித்துக்கொண்டார்.
இந்நிலையில், நேற்றைய தினம் காலை அண்ணாமலை தன்னைத் தானே சாட்டையால் அடித்துக்கொண்டதையும் கூல் சுரேஷ் சாட்டையால் அடித்துக் கொண்டதையும் ஒன்றாக தொடர்பு படுத்தி நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.