தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மக்களவை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று கூறி வந்தார். இந்த நிலையில் இன்று காலை டில்லியில் இருந்து வெளிவரும் செய்திகளில் அண்ணாமலை மக்களவை தேர்தலில் போட்டியிடுவார் என தகவல் வெளியானது. டில்லியில் நேற்று பாஜக வேட்பாளர்கள் பட்டியல் தேர்வு செய்யும் பணி நடந்தது. பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், நட்டா மற்றும் பாஜக ஆட்சி செய்யும் மாநில முதல்வர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டம் இரவு 10.30 மணிக்கு தொடங்கி அதிகாலை 4 மணி வரை நடந்ததாக கூறப்படுகிறது. இதில் முதல்கட்ட வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் தமி்ழகத்தில் இருந்து அண்ணாமலை போட்டியிடுவார் என்றும் முடிவானதாக தெரிகிறது.
அண்ணாமலை போட்டியிட்டால் கோவையில் இருந்து அவர் போட்டியிடலாம் என பாஜக தொண்டர்கள் மட்டத்தில் பேசப்படுகிறது. அண்ணாமலையை இங்கு நிறுத்த வேண்டும் என்பதற்காகவே, இந்த தொகுதியின் முன்னாள் பாஜக எம்.பி. சி.பி. ராதாகிருஷ்ணன், ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
அத்துடன் இந்த மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜியும் சிறையில் உள்ளதால் இங்கு அண்ணாமலை போட்டியிடலாம் என்ற முடிவுக்கு கட்சி மேலிடம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த அண்ணாமலை கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில்2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது, அப்போது திமுக மாவட்ட செயலாளராக இருந்த செந்தில் பாலாஜியின் தீவிர பணியால் அண்ணாமலை தோல்வியை தழுவினார். இப்போது அண்ணாமலைக்கு எந்த தடையும் இல்லை என்று கட்சி மேலிடம் கருதுவதால் அவர் கோவையில் போட்டியிடலாம் என தெரிகிறது.
இதற்காகவே கோவை அருகே உள்ள பல்லடத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அண்ணாமலையை அவர் பாராட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.