விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார். அதற்கிடையே செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: கர்நாடகா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருக்கும்போது, தமிழகத்திற்கு மட்டும் அதிகாரம் இல்லையா? முதல்வர் ஸ்டாலின் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயாராக இல்லை; அதிகாரமில்லை என பச்சைப்பொய் சொல்கிறார். அந்தந்த மாநில அரசுகள் கணக்கெடுப்பு நடத்தும்போது மத்திய அரசு தடுப்பதில்லை. அதிமுக.,வின் தொண்டர்கள் எல்லாம் பா.ஜ., உள்ளிட்ட மாற்றுக்கட்சியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அதன் தாக்கத்தை 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வின் ஓட்டு சதவீதத்தில் பார்க்கலாம். நம்பிக்கை துரோகி என்ற பெயர் இ.பி.எஸ்.,க்கு பொருந்தும். சிலரின் சுயலாபத்திற்காக அதிகார வெறிக்காக, கண்முன்னால் அதிமுக அழித்துக்கொண்டிருக்கிறார். லோக்சபா தேர்தலில் 134 வாக்குறுதிகளை வழங்கிய இ.பி.எஸ் எப்போது நிறைவேற்றுவார்? எம்பி.,க்களே இல்லாமல் எப்படி நிறைவேற்றுவார்? கோவையில் 9ல் 7 எம்எல்ஏ.,க்களை வைத்துள்ள அதிமுக, கோவை எங்கள் கோட்டை எனக்கூறிவிட்டு ஏன் தோற்றது? வெறும் டெபாசிட் வாங்கியும் வீர வசனம் பேசுகிறார் இபிஎஸ். இந்த சூழலில் எனக்கு அவர் அறிவுரை சொல்கிறார். அதிமுக கரையான் போல கரைகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் சீக்ரெட் அண்ணாமலைக்கு தெரியும் என இபிஎஸ் சொல்கிறார்.
அந்த சீக்ரெட் என்னவென்றால், ‘நாங்கள் (அதிமுக) மட்டும் நிற்க வேண்டும், ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளரை நிறுத்த வேண்டாம், நாங்கள் ஒன்றரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்’ என தொலைப்பேசியில் பேசினார். இபிஎஸ் கேட்டுக்கொண்டதால் ஜென்டில்மேனாக ஓபிஎஸ் விலகிக்கொண்டார்.
ஆனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பல ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்றார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாததற்கு புதுப்புது காரணங்களை கூறிவருகிறார். இப்போது சட்டம் ஒழுங்கு சரியில்லை அதனால் இடைத்தேர்தலை புறக்கணித்ததாக கூறும் இபிஎஸ், 2026லும் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனில், 2026 சட்டசபை தேர்தலையும் புறக்கணிப்பாரா? பா.ஜ., உங்களுக்கு அடிமையாக இருப்பதற்கு இல்லை; தமிழகத்திற்கு நல்லாட்சி கொடுக்கவே பா.ஜ., இருக்கிறது. தனது அருகில் நிற்கவைத்து அங்கீகாரம் கொடுத்த பிரதமர் மோடியின் முதுகில் குத்திய துரோகி இபிஎஸ். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வரானாரா? தலைமை சரியில்லாததால் அதிமுக.,வுக்கு மக்கள் தண்டனை கொடுத்திருக்கிறார்கள்; லோக்சபா தேர்தலில் அதிமுக பல இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. தன் கட்சியை காப்பாற்ற முடியாத இபிஎஸ் எனக்கு அறிவுரை கூற வேண்டியதில்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்