அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை, பாடி, கைலாசநாதர் கோவில் மற்றும் திருவாலீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களின் திருப்பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பாடி கைலாசநாதர் கோவில் மற்றும் திருவாலீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்வது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம். இந்த 2 கோவில்களிலும் திருப்பணிகள் மேற்கொள்ள மாவட்ட குழு மற்றும் மாநில வல்லுநர் குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2 கோவில்களிலும், 2 ஆண்டு காலத்திற்குள் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும். தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, அமைச்சர்கள் மீது வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார். இது வெளிப்படையான உலகம். இதில் எதையும், மறைத்து வாழ முடியாது.
எங்களுக்கு மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை. அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம். எந்த நிலையிலும், எதையும் எதிர்கொள்வதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இருக்கிறது. இந்த ஆய்வின்போது அம்பத்தூர் எம்.எல்.ஏ. ஜோசப் சாமுவேல், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், சென்னை மண்டல இணை ஆணையர் தனபால், மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் மூர்த்தி, மாநகராட்சி உறுப்பினர்கள் நாகவல்லி, ராஜகோபால் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.