ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல் முடிந்ததில் இருந்தே அதிமுக – பாஜக இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வந்தது. கடந்த மாதம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் கோவையில் நடை பயணத்தில் இருந்த அண்ணாமலையை உடனடியாக டில்லி கிளம்பி வருமாறு பாஜ மேலிடம் உத்தரவிட்டுள்ள நிலையில் நேற்று முன்தினம் விமானம் மூலம் டில்லி புறப்பட்டு சென்றிருந்தார் அண்ணாமலை. நேற்றைய தினம் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரை அண்ணாமலை சந்தித்து பேசினார். கூட்டணி கட்சியினரை தொடர்ந்து கடுமையாக விமர்சித்தது தொடர்பாக அண்ணாமலையிடம் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பாஜகவின் சித்தாந்தம், எண்ணங்களின்படிதான் மாநிலத் தலைவர் செயல்பட வேண்டும். தனது சொந்த கருத்துகளை கூறி, அதன்படி நடந்துகொள்ள கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளனர். மேலும், பாஜக மாநில தலைவர் பதவியை அண்ணாமலை விமர்சித்து பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர்கள் கூறியதாக தெரிகிறது. கூட்டணி கட்சியினரிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து அண்ணாமலைக்கு பல ஆலோசனைகளை அவர்கள் வழங்கி உள்ளனர். இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அண்ணாமலை நேற்று மாலை சந்தித்தார். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த சந்திப்பின் போது நடந்த சம்பவங்கள் மற்றும் விமர்சனங்கள் குறித்தும் நிர்மலா சீதாராமன் பல விளக்கங்களை கேட்டுள்ளார். கூட்டணி முறிவால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், அதிமுக இல்லாமல், பாஜகவால் பலமான கூட்டணி அமைக்க முடியுமா என்பது குறித்தும் அவர் கேட்டறிந்தார். இந்த சந்திப்பின் போது அண்ணாமலை அளித்த விளக்கங்களை அமித் ஷாவிடம் நிர்மலா சீதாராமன் அறிக்கையாக அளிக்க இருக்கிறார். இதேபோல, ஜே.பி.நட்டா, பி.எல்.சந்தோஷ் ஆகியோரும் அண்ணாமலை அளித்த விளக்கங்களை அமித் ஷாவிடம் தெரிவிக்க உள்ளனர் இவற்றின் அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளை பாஜக மேலிடம் எடுக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அண்ணாமலையின் 3ம் கட்ட நடைப்பயணம் நாளை துவங்க இருந்தது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. மேலும் நேற்றைய தினம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அண்ணாமலை மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்து விட்டதாகவும் டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.