சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 570க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகம் நிர்ணயிக்கும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக திறமையான பேராசிரியர்கள், அனைத்து வசதிகளையும் கொண்ட ஆய்வகங்கள், மாணவர் சேர்க்கை, உள்கட்டமைப்பு வசதி உள்ளிட்டவைகளின் அடிப்படையில் அந்த கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைகழகம் அங்கீகாரம் அளிக்கும். நடப்பாண்டு நடைபெற்ற பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் 442 கல்லூரிகளில் உள்ள 2 லட்சத்து 19 ஆயிரத்து 346 இடங்களுக்கு ஒற்றை சாளர முறையில் 1,60,780 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 80,951 மாணவர்கள் பொதுப்பிரிவிலும், 78,475 மாணவர்கள் 7.5 சதவீத அரசு உள் ஒதுக்கீட்டில் சேரவும் அனுமதி வழங்கப்பட்டது.
இந்த சூழலில், அண்ணா பல்கலைக்கழத்துடன் இணைப்பு பெற்ற 75 கல்லூரிகளில் மிகவும் குறைந்த அளவிலேயே மாணவர்கள் சேர்க்கை நடந்திருப்பதாக தெரிகிறது. சில கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், இந்த கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்கள் வேறு கல்லூரிகளில் சேர்க்கப்படுவார்கள் என்றும், அந்தக் கல்லூரிகளின் இணைப்பு அங்கீகாரத்தை ரத்து செய்வது குறித்து பரீசீலனை செய்து வருவதாக எச்சரித்துள்ளது.