Skip to content
Home » ஒரே நேரத்தில் 10 கல்லுாரிகளில் பணியாற்றும் 189 “மோசடி” பேராசிரியர்கள்.. ஒருவர் 32 கல்லூரி..

ஒரே நேரத்தில் 10 கல்லுாரிகளில் பணியாற்றும் 189 “மோசடி” பேராசிரியர்கள்.. ஒருவர் 32 கல்லூரி..

அண்ணா பல்கலையின் இணைப்பில், 450க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங், ‘ஆர்கிடெக்ட்’ கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில், 433 கல்லுாரிகள், இந்த ஆண்டு இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ளன. இந்த கல்லுாரிகள், அண்ணா பல்கலையில் இணைப்பு அந்தஸ்தும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அங்கீகாரமும் பெற்றிருக்க வேண்டும். அங்கீகாரம் பெற, ஒவ்வோர் ஆண்டும் தங்கள் கல்வி நிறுவன விபரங்களை, தாக்கல் செய்ய வேண்டும். அதில், கட்டட உறுதித்தன்மை, பாதுகாப்பு, சுகாதாரம் உள்ளிட்டவற்றுக்கு சான்றளிக்க வேண்டும். மேலும், கல்லுாரி வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், கல்வி நிறுவனத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்களின் விபரங்களை, தாக்கல் செய்ய வேண்டும். இந்த ஆவணங்களின் உண்மைத்தன்மை குறித்து, அண்ணா பல்கலை குழுவினர், நேரடியாக கல்லுாரிகளில் ஆய்வு செய்வது வழக்கம். இந்நிலையில், ‘அறப்போர் இயக்கம்’ சார்பில், தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம், நேற்று முன்தினம் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில், இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 353 பேராசிரியர்கள் போலியாக ஆவணங்களை சமர்ப்பித்து, 10க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் பணியாற்றுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் புகார் தொடர்பாக, அண்ணா பல்கலை துணை வேந்தர் வேல்ராஜ் தலைமையிலான குழுவினர் விசாரித்துள்ளனர்.
இதுகுறித்து, துணை வேந்தர் அளித்த பேட்டி.. அறப்போர் இயக்கம் அளித்த புகாரின்படி, பேராசிரியர்களின் ஆதார் எண், பெயர், பிறந்த தேதி விபரங்களை ஆய்வு செய்தோம்.
இதில், ஆதார் எண் அடிப்படையில், எந்த முரண்பாடும் தெரியவில்லை. ஆனால், 2000 ஆசிரியர்களின் பணியிடம் பற்றாக்குறையாக இருந்தது தெரியவந்தது. பின், எங்கள் தரவுகளில் உள்ள பேராசிரியர்களின் பிறந்த தேதி, பெயர், ஆதார் எண் ஆகிய மூன்றையும் பொருத்திப் பார்த்ததில், 189 பேர் தங்கள் ஆதார் எண்ணை மட்டும் மாற்றி பதிவு செய்து, ஒரே நேரத்தில், பல கல்லுாரிகளில் பணியில் இருப்பதுபோல், மோசடி செய்தது தெரியவந்துள்ளது. மொத்தம், 52,500 பேராசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில், 2000 ஆசிரியர் பணியிடங்களை, 189 பேர் தங்களின் பிடியில் வைத்துள்ளனர். இவர்களில் ஒருவர், 32 கல்லுாரிகளில் பணியாற்றுவது தெரியவந்துள்ளது. இது மிகப்பெரிய மோசடி. இதில் ஈடுபட்டவர்கள் மீதும், போலி ஆவணங்களை பயன்படுத்தி, பேராசிரியர்கள் விபரத்தை தாக்கல் செய்த கல்லுாரிகள் மீதும், சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *