பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருள்மிகு ஸ்ரீமதுரகாளியம்மன் கோவிலில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் அவர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சி.இராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு, பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தி, திருக்கோவிலின் சார்பில் வழங்கப்பட்ட புடவைகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கினர்.
மாண்புமிகு தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களைப் போற்றும் வகையிலும், தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் அவராற்றிய பணியினை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு பொது விருந்து வழங்கிடவும், மேலும் கோவிலுக்கு பக்தர்களால் வழங்கப்பட்ட துணிகளில் நல்ல நிலையில் உள்ள புடவைகளை ஏழை எளிய பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கிட
தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று (03.02.2024) பெரம்பலூர் சிறுவாச்சூர் அருள்மிகு ஸ்ரீமதுரகாளியம்மன் கோவிலின் சார்பில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, 500க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்களுக்கு பொது விருந்தும் 200 நபர்களுக்கு புடவைகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட அறங்காவல் குழு உறுப்பினர் சி.பாஸ்கர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.