சென்னை அண்ணாநகர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட்(எ) சின்ன ராபர்ட்(28). இவர் மீது 2 கொலை வழக்கு என 16 வழக்குகள் உள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் உள்ளார். இவருக்கு திருநங்கை ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு வாடகை வீட்டில் வசித்துள்ளார். நேற்றிரவு திருநங்கை செல்போன் கடைக்கு சென்றபோது ராபர்ட் தனியாக இருந்துள்ளார். அப்போது பைக்கில் முகமூடி அணிந்துவந்த 6 பேர் கொண்ட கும்பல், ராபர்ட்டை மறித்து சரமாரியாக தாக்கியதுடன் தர, தரவென நடுரோட்டில் இழுத்து சென்றனர். இதன்பின்னர் பட்டாக் கத்தியால் சரமாரியாக வெட்டி ராபர்ட்டை கொன்றுவிட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது. இந்த காட்சியை தனது கண்முன்னே பார்த்து தந்தை எட்வின் கதறி துடித்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அண்ணாநகர் போலீசார் வந்து ராபர்ட் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்தனர். 5 தனிப்படை அமைத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 300க்கும் மேற்பட்ட கேமராக்களை ஆய்வு செய்து கும்பலை தேடி வருகின்றனர். இதனிடையே சென்னை அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி பகுதியில் உள்ள குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் வசித்துவரும் ரேவதி(32) என்பவரை வெட்டிவிட்டு பின்னர் ரவுடி ராபர்ட்டை கொலை செய்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு ராபர்ட்டின் கூட்டாளி கோகுல் என்பவரை முன்விரோதம் காரணமாக அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் ரவுடி லோகு என்பவர் கொலை செய்துள்ளார். இதன்காரணமாக லோகுக்கும் ராபர்ட்டிற்கும் முன்விரோதம் இருந்துள்ளது.