மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 54-வது நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னையில் திமுக சார்பில் அமைதிப்பேரணி நடந்தது. முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கட்சியின் பொதுச் செயலாளர் துரை முருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் பொன்முடி, மா.சு., சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் இன்று காலை வாலாஜா சாலையில் இருந்து அமைதி பேரணியாக அண்ணா நினைவிடம் வந்தனர். சரியாக 8.50 மணிக்கு அவர்கள் அண்ணா நினைவிடம் வந்ததும் அங்கு முதல்வர் தலைமையில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள், அனைத்து அணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
இதுபோல இன்று திருச்சி உள்பட அனைத்து மாவட்டதலைநகரங்கள் , மற்றும் முக்கிய நகரங்களிலும் திமுக, அதிமுக, மதிமுகவினர் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.