அரியலூர் நகரில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு ஒத்திகையினை அரியலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி 27.சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி, அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க, பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அரியலூர் நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு ஒத்திகையினை மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.செல்வராஜ் கலந்து கொண்டார்.
இந்திய நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி தங்கள் வாக்கு செலுத்துவதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்டம், அரியலூர் நகராட்சியில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு ஒத்திகையினை இன்றையதினம் மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்ணா துவக்கி வைத்தார்.
ஜனநாயகத்தை வலுப்படுத்திட அனைவரும் வாக்காளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றி பாதுகாப்பாகவும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் காவல்துறையினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது. இக்கொடி அணிவகுப்பு ஊர்வலம் அரியலூர் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி, முக்கிய வீதிகளில் வலம் வந்த காவல்துறையினர் மக்களிடத்தில் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் அரியலூர் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.