மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் இரு தவணைகளில் ரூ. 40 லட்சம் லஞ்சம் பெற்றதாக கடந்த 1-ம் தேதி தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்குக்கான ஆதாரங்களைத் திரட்டும் வகையில் மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு பிரிவினர் சோதனையிடச் சென்றனர். அப்போது, அவர்களை அமலாக்கத்துறை உதவி இயக்குநர் பிரிஜேஸ் பெனிவால் தலைமையிலான ஊழியர்கள் தடுத்தனர். இதனால், கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டதுடன், ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 35 பேர் அத்துமீறி நுழைந்து, ஆவணங்களை எடுத்துச் சென்றது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலிடம் அமலாக்கத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதற்குப் பதிலடியாக, அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோதனையிடச் சென்றபோது, அங்கிருந்த அதிகாரிகள், ஊழியர்கள் தங்களைப் பணியை செய்யவிடாமல் இடையூறு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தல்லாகுளம் போலீஸாரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் அங்கித் திவாரி ரூ.40 லட்சம் லஞ்சம் பெறப்பட்ட சம்பவத்தில், சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நிகழ்ந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் டெல்லி அமலாக்கத்துறை ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளது.
இது தொடர்பாக வழக்குத் தொடர்புடைய அங்கித் திவாரி, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணையில் கிடைக்கும் தகவலின் அடிப்படையில், லஞ்சத்தில் பங்கிட்டுக்கொண்ட அதிகாரிகள் மீதும், விதிமுறைகளை மீறி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
முதற்கட்டமாக இவ்வழக்கில் புகார்தாரராக உள்ள மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்த உள்ளனர். இதற்காக வழக்கின் ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் இருந்து பெறுவதற்கு அமலாக்கத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.