அங்கன்வாடி பணியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கோடை விடுமுறை வழங்க வேண்டும், அங்கன்வாடி ஊழியர்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், ஓய்வு வயதை 62 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை தரமணியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் அருகே 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். சேலம், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, அரியலூர், தூத்துக்குடி, திருவாரூர் உள்பட பல்வேறு இடங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 2 நாட்களாக நடைபெற்று வந்த அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. பேச்சுவார்த்தையில் அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.