அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பில் அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அங்கன்வாடி மையத்திற்கு வருகைதரும் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் எடையை முறையாக பணியாளர்கள் கண்காணித்திட வேண்டும். குழந்தைகள் குறித்த தரவுகளை பதிவு செய்யும் போது உரிய கவனத்துடன் செயல்பட வேண்டும். குழந்தைகளின் கற்றல் திறன், செயல்பாடுகள் போன்றவற்றை தொடர்ந்து மேம்படுத்திட சிறப்பாக செயல்பட வேண்டும். குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு தயார் செய்யும் போது அவை குழந்தைகள் உண்ணும் வகையில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். எனவும், அங்கன்வாடி மையங்களினை தூய்மையாக பராமரித்திட வேண்டும். கழிவறைகள் உள்ள அங்கன்வாடி மையங்களில் அதனை குழந்தைகள் பயன்படுத்திட குழந்தைகளுக்கு உரியவாறு பழக்கப்படுத்திட வேண்டும்.
மேலும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் அரியலூர் மாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 774 குழந்தை நல மையத்தின் பணியாளர்கள் அனைவரும் நேரடியாக திட்ட செயல்பாடுகள், வழிமுறைகள் மக்களிடம் சிறப்பாக சென்றடையும் வகையில் விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட திட்ட அலுவலர் க.அன்பரசி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் நிலை 1 மற்றும் நிலை 2, மாவட்ட ஒருங்கிணைப்பாளர், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.