ஆந்திராவில் மே மாதம் 13-ம் தேதி சட்டப்பேரவை மற்றும் மக்களவை தொகுதி களுக்கு ஒரே கட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி தற்போது கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த 11 நாட்களாக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ‘நாங்களும் தயார்’ எனும் பெயரில் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு விஜயவாடா மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் அவர் பஸ்ஸில் இருந்தபடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட போது, சிங்நகர் தாபா அருகே கோட்ல செண்டர் எனும் இடத்தில் கூட்டத்தில் இருந்து மலர்களுடன் கற்களும் வீசப்பட்டன. இதில் ஒரு கல் ஜெகன் மோகன் ரெட்டியின் இடது கண்ணுக்கு மேல் உள்ள நெற்றி பகுதியில் பட்டது. இதனால் அவர் உடனே குனிந்து கொண்டார். இதனை பார்த்த அங்கிருந்த அவரது ஆதரவாளர்கள் அவரை பஸ்ஸுக்குள் கொண்டு சென்று விட்டனர். பின்னர் பஸ்ஸில் இருந்த மருத்துவர் அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளித்தார். மேலும் ஜெகன் மோகன் ரெட்டியுடன் நின்று கொண்டிருந்த ஆந்திர மாநில முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எல்லம்பல்லி ஸ்ரீநிவாஸ் என்பவர் மீதும் கல் வீசப்பட்டது. ஜெகன்மோகன் ரெட்டிக்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஆந்திரா முழுவதும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் கொந்தளித்துள்ளனர். பல இடங்களில் இக்கட்சியினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தெலுங்கு தேசம் கட்சியினர் மீது ஜெகன் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.