கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்ட அரங்கில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நல சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் நடேசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கம்பம் ராஜன், கரூர் மாவட்ட தலைவர் கந்தசாமி, மாவட்ட செயலாளர் குப்புசாமி, பொருளாளர் சுரேஷ் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்ட சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த மாநில பொதுச் செயலாளர் கம்பம் ராஜன், எங்களது சமுதாய மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தனி உள் ஒதுக்கீடாக 5%
வழங்க வேண்டும் அல்லது எங்கள் சமுதாயத்தை பழங்குடியின வகுப்பில் சேர்க்க வேண்டும் என்றும், எங்கள் சமுதாய மக்கள் வன்கொடுமை மற்றும் தீண்டாமை போன்ற செயல்களால் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வருகின்றோம். ஆந்திரா அரசு எங்களது சமுதாய மக்களுக்கு பாதுகாப்பு சட்டம் வழங்கியுள்ளது.
அதைப் போல, தமிழகத்தில் எங்களது சமுதாய மக்களுக்கு வன்கொடுமை மற்றும் தீண்டாமை கொடுமையில் இருந்து காப்பாற்ற பாதுகாப்பு சட்டத்தை வழங்க வேண்டும் என்றும், இந்து அறநிலை துறைக்கு கட்டுப்பட்ட அரசுக்கு சொந்தமான கோயில்களில் குடியிருக்கும் முடி திருத்தும் தொழிலாளர்களையும் அங்கு மேளம் வாசிக்கும் தொழிலாளர்களையும் அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்தார்.