ஆந்திராவின் கிட்டலூர் மண்டல் மாவட்டத்தின் அம்பாவரம் கிராமத்தில், 2021-ம் ஆண்டு சாக்கடை கால்வாயில் ஒரு சிறுமியின் பிணம், பிளாஸ்டிக் பையில் கட்டப்பட்ட நிலையில் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 7 வயதான அந்த சிறுமி, கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கினர். சிறுமியின் வீட்டிற்கு அருகில் வசித்த சிறுமியின் நெருங்கிய உறவினரான டி.சித்தையா (வயது 30) என்ற வாலிபர் சிறுமியை கற்பழித்து கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மனைவியை பிரிந்து வாழ்ந்த அவர், சம்பவத்தன்று பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பலாத்காரம் செய்தபோது சிறுமி கூச்சலிட்டதால், கட்டில் சட்டத்தால் சிறுமியின் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். இதையடுத்து சித்தையாவை கைது செய்த போலீசார், ஆந்திராவின் பிரகாசம் மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சோமேசகர், குற்றம் சுமத்தப்பட்ட சித்தையாவுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.