அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பெரிய தத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற திரௌபதி மற்றும் செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தீமிதி திருவிழாவில் பக்தர்கள் சாட்டையடி வாங்கி வினோத நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. இந்த விழாவில் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து, அக்கினி குண்டத்தில் தீ மிதித்தனர். அதன் பின்னர் தீ மிதித்த பக்தர்கள் வரிசையில் நின்று, அம்மன் முன்பு சாட்டையடி வாங்கி தங்களது வினோத நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். இக்காட்சிகள் அருகில் இருந்த பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
இது குறித்து சாட்டையடி பெற்ற பக்தர்கள் தெரிவிக்கையில், அம்மன் முன்பு சாட்டையடி வாங்கும் பக்தர்களுக்கு எந்த நோய் இருந்தாலும் குணமடையும் என்றும் மற்றும் பில்லி, சூனியம், மற்றும் துஷ்ட சக்திகள் எதுவாக இருந்தாலும் அது விலகி ஓடிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது என்பதால் சாட்டையடி வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டுவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.